Saturday, June 06, 2009

தீவிரவாதி

அந்த அதிகாலை கும்மிருட்டு வேளையில் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கிச் செல்லும் தொடருந்தில் நான் உட்கார்ந்திருந்தேன். சாளத்தில் இருந்து வரும் மெல்லிய குளிர் தென்றலில் மனம் மயங்கிப் போய்க்கிடந்தது. எதிர் இருக்கைகளில் என் தம்பியும் இரண்டு தங்கைகளும் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் என் அருகில் இருந்த அம்மாவைப் பார்த்தேன். அவருக்கும் இலேசான தூக்கக்கலக்கம் இருந்தது. அன்று எங்களுக்கு கொழும்பில் மருத்துவப்பரிசோதனை இருந்தது. கனடா நாட்டுத் தூதரகத்திலிருந்து மருத்துவச் சோதனை அறிக்கை கேட்டிருந்தார்கள். என் தம்பிக்கு 14 வயதாகியிருந்தது. தங்கைகளில் ஒருத்திக்கு 11 வயதும் மற்றவளுக்கு 4 வயதும் ஆகியிருந்தது. அம்மா தன் கைப்பையில் கனடாத் தூதரகத்தில் இருந்து வந்த விண்ணப்பங்களை ஒரு கோப்பில் வைத்திருந்தார்.

வண்டி சிலாபம் நகர்ப்பகுதியை அடைந்தது மெல்ல ஒளிபரவத் தொடங்கியிருந்தது. தூங்கிக் கொண்டிருந்த என் குட்டித் தங்கை எழுந்து உட்கார்ந்திருந்து சாளரத்தின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் ஒரு சிங்களப் பெண்மணி வந்து உட்கார்ந்தார். என் அம்மாவின் வயதை ஒத்த அந்தப் பெண்மணி வேலைக்குப் போகும் பெண்மணி என்று பார்வையிலேயே புரிந்தது. எங்களுக்கு அடுத்த பெட்டியில் ஐந்தாறு சிங்கள ஆண்கள் உட்கார்ந்திருந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். என் சின்னத்தங்கை பக்கத்தில் இருந்த சிங்களப் பெண்மணியிடம் மழலை மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்மணிக்கு எதுவும் புரியவில்லை. தங்கையைப் பார்த்துப் புன்னகைத்தார். தன் கையில் இருந்த ஏதோ ஒரு தின்பண்டத்தைத் தங்கைக்கு ஊட்டினார்.

வண்டி கொழும்பை நெருங்க நெருங்க எங்களை உற்சாகம் தொற்றிக்கொண்டது. இதோ இன்னும் 1 மணி நேரத்தில் கொழும்பை அடைந்து விடும். மருத்துவச் சோதனை முடித்து நாங்கள் கனடா போய் அப்பாவோடு சேர்ந்துவிடலாம் என்ற எண்ணமே எங்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது. அப்பா வெளிநாட்டுக்குப் போனதிலிருந்து பாவம் அம்மா தான் எல்லாவேலையும் செய்யவேண்டியிருந்தது. எங்கள் நான்கு பேரையும் வளர்ப்பது, கனடா தூதுரகத்திற்குச் சென்று விண்ணப்பம் கொடுப்பது, படுக்கையில் இருக்கும் அப்பம்மாவைக் கவனிப்பது என அம்மாவுக்கு எந்த நேரமும் வேலைகள் இருந்தபடியே இருக்கும். அப்பா இங்கிருந்திருந்தால் வெளிவேலைகள் எல்லாவற்றையும் அவரே கவனித்திருப்பார். அம்மாவுக்கு சிங்களமொழி பேசத்தெரியாது. பேசினாலும் புரியாது. சிலாபத்தில் நாங்கள் வாழ்ந்த ஊரிலிருந்து எங்கேயாவது வெளியே போனால் 1 வாரத்திற்குள் திரும்பவேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களை ஒவ்வொரு புதனும் நாங்கள் வாழும் ஊர்களிலிருக்கும் காவல்நிலையங்களில் கையெழுத்துப் போடச்சொல்லியிருந்தார்கள். அதனால் நாங்கள் கொழும்புக்குப் போனாலும் புதன்கிழமைக்கு முன் ஊருக்குத் திரும்பவேண்டியிருக்கும். கொழும்பிலும் சொந்தக்காரர் வீட்டில் தங்குவதாக இருந்தால் காவல்நிலையத்திற்குச் சென்று பதிவு செய்யவேண்டும். மொழி தெரியாத ஊரில் ஒற்றை ஆளாக நின்று அம்மா மிகவும் சிரமப்படுவதைப் பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கும். இன்று மருத்துவச்சோதனை முடிந்தால் விரைவில் எங்களுக்கு விசா கொடுத்து விடுவார்கள். நாங்கள் அப்பாவிடம் போய் விடலாம். அப்பாவும் அந்தக் குளிர்நிறைந்த தேசத்தில் தனியாக சிரமப்படவேண்டியிருக்காது என்ற நினைப்பே இனிமையாக இருந்தது. என் தங்கைகள் இருவருக்கும் கனடாவுக்குப் போகப் போகின்றோம் என்பதைவிட விமானத்தில் போகப் போகின்றோம் என்ற புளகாங்கிதமே அதிகமாக இருந்தது.

நான் சாளரத்தின் வழியே வெளியே எட்டிப்பார்த்தேன். தொடருந்து நீர்கொழும்பைத் தாண்டியிருந்தது. அடுத்த பெட்டியிலிருந்து 4 கழுத்துப்பட்டி அணிந்திருந்த ஆண்கள் எங்கள் பெட்டியை நோக்கி வருவது தெரிந்தது. பெட்டியிலிருந்த அத்தனைபேரையும் புறந்தள்ளி விட்டு அவர்கள் எங்களை நோக்கி வந்தார்கள். அம்மாவை நோக்கி உன் பெயர் என்ன என்று அதட்டும் குரலில் அவர்கள் கேட்டார்கள். அம்மாவுக்கு அவர்கள் கேட்டது புரியவில்லை. திகைத்துப் போய்ப்பார்த்தார். பின்னர் தன்பெயரைச் சொன்னார். எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகின்றாய்? என்றெல்லாம் அவர்கள் கேள்விகேட்கத்தொடங்கினார்கள். நான் அம்மாவின் கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டேன். இப்போது அவர்களின் பார்வை என்மீது பாய்ந்தது. அம்மா கனடா நாட்டுத்தூதரகத்திற்குப் போகிறோம் என்று தனக்குத் தெரிந்த மொழியில் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன ஆதாரம்? நீ புலிதானே என்று அம்மாவை அவர்கள் மிரட்ட நான் கைப்பையைத் திறந்து கனடா நாட்டுத் தூதரகத்தில் எங்களுக்குக் கொடுத்திருந்த விண்ணப்ப படிவங்களைக் காட்டினேன். எங்கள் அடையாள அட்டைகளைப் பார்த்த அவர்கள் சொந்த ஊர் யாழ்ப்பாணம் என்றதும் அதிகமாக மிரட்டத்தொடங்கினார்கள். நான் எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சிங்களப் பெண்மணியை கலங்கிய கண்களோடு பார்த்தேன். அவரின் முகத்தில் புன்னகை இருக்கவில்லை. அந்த நால்வரும் எங்கள் துணிப்பைகளிலிருந்து துணிகளை வெளியே எடுத்துக் கொட்டினார்கள். அதற்கு வெடிகுண்டைத் தேடினார்கள். எங்கள் இருக்கைகளைச் சுற்றி இருந்தவர்களெல்லாம் எங்களை வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. குட்டித் தங்கை பயத்தோடு அம்மாவின் மடியில் சுருண்டு உட்கார்ந்திருந்தாள். அந்த நால்வரும் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் எண்ணினோம். சந்தேகத்தின் அடிப்படையில் எங்களைக் கைது செய்து சிறையில் போடப்போகின்றார்களோ என்று அஞ்சினேன். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு அவர்களின் விசாரணையும் சோதனையும் தொடர்ந்தது. கனடா நாட்டுத்தூதரகம் அனுப்பியிருந்த விண்ணப்பபடிவங்கள் பலரின் கைமாறிக் கசங்கிக் கொண்டிருந்தன. அதன்பின்னர் அவர்களுக்கு என்ன தோன்றியதோ எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போனார்கள். போகும் போது பேருக்காவது வருத்தம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். எதுவும் சொல்லவில்லை.

அம்மா கசங்கிப் போயிருந்த விண்ணப்ப படிவங்களை அடுக்கிக் கோப்பில் போட்டுக்கொண்டிருந்தார். நானும் தம்பியும் வெளியே கொட்டப்பட்டிருந்த துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தோம். துணிகளை அடுக்கிவிட்டு இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து சாளரத்தினூடாக வெளியே பார்த்தேன். எங்களைச் சோதித்த அந்த 4 பேரும் சத்தமான குரலில் தங்கள் பணியிடத்து நகைச்சுவைகளைச் சிரிக்கச் சிரிக்கப் பேசிச்சிரித்தபடி வெளியே புகைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஆக, அந்த நால்வரும் எங்களைப் போன்ற சாதாரண பயணிகளா? சாதாரண பொதுமகனுக்கு இன்னொரு பொதுமகனின் உடைமைகளைச் சோதிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? சக பயணி துன்பத்திலிருக்கும் போது கைகொடுக்க இந்தச் சிங்களப் பெண்மணி கூட முன்வரவில்லையே ஏன்? இப்போது என் மனத்தில் பல ஏன்கள் முளைத்தது. என் முன்னால் இருக்கும் அந்தச் சிங்களப்பெண்மணியை நேராக உற்றுப் பார்த்தேன். " பயங்கரவாதிகள் குண்டு வைக்கின்றார்கள். அதனால் தான் பாதுகாப்புக்காக சோதித்தார்கள் " என்றார் அந்த அம்மா. எனக்கு இப்போது சிரிப்பு வந்தது. "அடப்பாவிகளா, குண்டு வைக்க வந்த தீவிரவாதி தன் 4 வயது குழந்தை உட்பட நான்கு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு குண்டுவைக்கவருவானா?" என்று கேட்கவேண்டும் போல் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. என் குட்டித்தங்கை அம்மாவைப் பார்த்து " தீவிரவாதி என்றால் என்ன அம்மா? " என்று மழலைமொழியில் கேட்டுக் கொண்டிருந்தாள்.

Friday, June 05, 2009

பாதகம் செய்பவரைக் கண்டால்..?



அந்தச் சிறுகுன்றின் மீது ஏறி இப்போது கோணமலையை அடைந்திருந்தோம். மலைப்பதையின் இருமருங்கிலும் பச்சை பசேலென்றிருந்த காட்டையும் அந்தக் காடுகளின் பின்னால் ஒளிந்திருந்த இராணுவ முகாம்களையும் மருட்சியோடு பார்த்தவண்ணம் மலை உச்சியை அடைந்தோம். முதலில் தென்பட்டது இராணவன் வெட்டு. இராணவனின் தாயார் தென்னிலங்கையிலிருந்து தினமும் இங்கு சிவனைத் தரிசிக்கவருவாராம். தாய்படும் பாட்டைக் கண்டு மனமுருகிய இராணவன் மலையையே பெயர்த்து தான் இருக்குமிடத்தில் வைக்கமுயன்றான். அதனால் தான் மலையில் பெரியவெட்டு உண்டானது என்ற புராணக்கதை தான் நினைவில் வந்தது. கோவில் எந்தப்பகட்டும் இல்லாமல் எளிமையாக அழகாக இருந்தது. " குரைகடல் ஓதும் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.." என்று பாடி முடித்தபோது என் கண்கள் பனித்திருந்தன. கூடவே வந்த என் திருகோணமலைத் தோழி என்னை வியப்பாகப் பார்த்தாள். "நித்தி, இந்த தேவாரத்தை என் ஐந்து வயசில அர்த்தம் தெரியாமல் பாடினேன். இங்கு வந்து பார்த்தபிறகு தான் தெரியுது அந்தத் தேவாரத்தில் சொன்னது போலவே இந்தக் கோவில் அழகு தான். சம்பந்தர் கில்லாடி தான். அங்கிருந்தபடியே இங்கிருக்கும் கோவிலைப் பற்றி எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார்" என்றேன் நான். இன்றோடு மூன்றாவது தடவையாக கோணேசுவரத்திற்கு வந்திருக்கிறேன். எத்தனை தடவை வந்தாலும் சலித்துப் போகாத அழகு இந்தக் கோவிலுக்கு.

கோவிலின் இடது மூலையில் ஒரு மரம். அந்த மரத்தில் போய் வேண்டுதல் உள்ளவர்கள் துணியால் முடிச்சுப் போடுவார்கள். முதல் தடவை வந்திருந்த போது நான் அந்த மரத்தில் துணியால் முடிச்சுப் போட்டுவிட்டுக் குனிந்து கீழே பார்த்தேன். அம்மாடியோவ்... அப்படியே தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது. ஆயிரம் அடிப்பள்ளத்தாக்கு. கீழே கடலலைகள் பாறையை முட்டிமோதிக் கொண்டிருந்தன. நித்தி ஓடி வந்து என் கையைப் பிடித்து இழுத்தாள். போன உயிர் மீண்டு வந்தது போல் இருந்தது எனக்கு. இந்த இடத்திலிருந்து பலர் குதித்து தற்கொலை செய்துகொள்வார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் அந்த மரத்திற்கு போகும் வாசலை இழுத்து மூடிவிடுவார்களாம்.நித்தி சொல்லச் சொல்ல எனக்கு நெஞ்சு சில்லிட்டுப் போகும். மலையால் இறங்கி வாசல்பிள்ளையாருக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டு சோதனைச்சாவடிக்குள் நுழைந்தோம்.

எங்கள் அடையாள அட்டைகளைச் சோதித்துக் கொண்டிருந்த சிப்பாய் கண்களால் நித்தியை அளவெடுப்பது தெரிந்தது. நித்தி அவமானப்பட்டுக் குறுகிப் போய் அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அடையாள அட்டையைப் பார்த்ததும் 3 மாதங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் தான் என் நினைவுக்கு வந்தது. 3 மாதங்களுக்கு முன் ஒருநாள் காலை 6 மணிக்கு நடக்கும் இயற்பியல் வகுப்பில் என் அருகில் மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் நித்தி. அவள் உடல் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. " என்ன நித்தி, என்ன நடந்தது? " நான் பதற்றத்தோடு கேட்டேன். "செல்வி வெளியில வா " என்று அவள் என் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டுபோனாள். " செல்வி, சோனகர்வாடியில வைச்சு திடீரென்று ஒரு ஆமிக்காரன் என்னை மறிச்சான். என்ர அடையாள அட்டையை வாங்கிட்டு பக்கத்தில இருந்த இருட்டு ஒழுங்கைக்குள் வா அப்ப தான் அடையாள அட்டையைத் திருப்பித் தருவன் என்று சொல்லிட்டு அந்த ஒழுங்கைக்குள் போனான். நான் பதறியடிச்சு இங்கை ஓடி வந்திட்டன். இப்ப அடையாள அட்டை இல்லாமல் எப்பிடி வீட்டுக்குத் திரும்பி போறது தெரியல்ல " என்று சொல்லிவிட்டு விக்கி விக்கி அழுதாள். சொல்லும் போது அவளுக்கு பதற்றத்தில் மூச்சு வாங்கியது. வார்த்தைகள் தடுமாறின. எங்களோடு படிக்கும் ஆண் மாணவர்கள் உதவ முன் வந்தார்கள். நித்தி வீட்டுக்கு தகவல் சொல்லப்பட்டது. அந்தப் பகுதியில் இருக்கும் இன்னொரு கிராமசேவகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊர்ப் பெரியவர்கள் போய் இராணுவ அதிகாரியோடு பேசி அடையாள அட்டையை மீட்டு வந்தார்கள். இந்த சம்பவத்தை வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது. சொன்னால் கொல்லப்படுவீர்கள் என்று அந்த அதிகாரியால் நித்தி குடும்பம் மிரட்டப்பட்டது.

அடையாள அட்டை மீட்கப்படும் வரை நித்தி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். திரும்ப வகுப்புக்களுக்கு அவள் வரத்தொடங்கியபோது எங்களைக் கிண்டல் செய்தபடி எங்களுக்குப் பின்னால் நிழல் போல தொடரும் ஆண் மாணவர்கள் கூட்டம் எங்களுக்குக் காவல் தெய்வங்களாகத் தெரிந்தார்கள். முன்பெல்லாம் எங்களைத் தொடர்ந்து வரும் அவர்களை முறைத்துத் திட்டித் தீர்க்கும் நித்தியும் பேசாமல் அமைதி காத்தாள். அந்த மாணவர்களும் கேலி பேசுவதைத் தவிர்த்துப் பொறுப்பு நிறைந்தவர்களாக மாறி ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்பவேண்டும் என்ற அக்கறையோடு நடந்து கொண்டார்கள்.

திரும்பி மிதிவண்டியில் வரும் போது " நித்தி, நீ அநியாயத்திற்கு அழகாய்ப் பிறந்து தொலைத்து விட்டாய்" என்றேன் நான்." ஓகோ, அதனால் தான் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் அநியாயத்திற்கு அதிக நேரம் காக்கவைக்கப் படுகிறேனா? " என்று கேட்டாள் நித்தி. என்னால் எதுவும் பேசமுடியவில்லை. உவர்மலையில் இருக்கும் ஏற்றத்தில் மிதிவண்டியை ஓட்டும் போது எனக்கு மூச்சுவாங்கியது. வண்டி மட்டிக்கழியை நெருங்கிய போது லேசாக ஏதோ இடிப்பது போல் இருந்தது. குனிந்து பார்த்தால் வண்டியில் காற்றுப் போயிருந்தது. நாங்கள் இருவரும் வண்டியிலிருந்து இறங்கி அதை உருட்டிக் கொண்டு வந்தோம். மட்டிக்கழிப்பக்கத்திலேயே ஒரு மிதிவண்டி திருத்தும் கடை இருந்தது.
" நித்தி, வா இந்தக் கடையில போய்க் காத்தடிச்சுப் போட்டு போகலாம் " என்றேன் நான்.
" இந்தக் கடைவேண்டாம், செல்வி. கொஞ்சம் தள்ளி இன்னொரு கடைவரும் அங்கு போய்க் காத்தடிக்கலாம் " என்றாள் நித்தி.
" ஏன் நித்தி, இந்தக் கடைக்கு என்ன குறைச்சல்? பேசாமல் இங்கேயே அடிக்கலாம் " என்றேன் நான்.
"செல்வி சொன்னால் கேளு, இங்கை வேண்டாம் எண்டால் வேண்டாம் தான். எதுவும் பேசாமல் வா " நித்தி கோபமாக இருப்பது தெரிந்தது. நான் பேசாமல் நித்தியைப் பின் தொடர்ந்தேன். வீட்டை நெருங்கும் போது நித்தி சொன்னாள்.

"இந்தக் கடைக்காரன் யார் தெரியுமா? 12 வருசத்துக்கு முந்தி இந்த உவர்மலைப் பகுதியில இவ்வளவு சனம் இல்லை செல்வி, கொஞ்சக் குடும்பம் தான் இருந்தம். அப்ப இந்தக் கடைக்காரனும் வேற சில சிங்கள காடையர்களும் சேர்ந்து ஐம்பது அறுபது தமிழ்ச்சனத்தை வெட்டிக் கொன்றாங்கள் செல்வி, என்ர அப்பாவின் கழுத்தில என்ன பெரிய தழும்பு எண்டு அடிக்கடி கேப்பியே. அது இந்தக் கடைக்காரன் அவருக்குக் கொடுத்த பரிசு செல்வி " நான் திகைத்துப் போய் நித்தியைப் பார்த்தேன். " இவ்வளவு அநியாயத்தைச் செய்து போட்டு எவ்வளவு தைரியமா இந்த மக்களுக்கு மத்தியில் அவனால வாழமுடியுது நித்தி? அவனைத் தண்டிக்க யாருமில்லையா? "என்று ஆற்றாமையோடு கேட்டேன் நான். "எப்படி முடியும் செல்வி? கடையின் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சோதனைச் சாவடி. இதையெல்லாம் தாண்டி அவனை யாராவது தண்டிக்க வரமுடியுமா? என் அப்பாவுக்கு நடந்த அந்தக் கொடூரத்தை மறந்து நிம்மதியா வாழமுயற்சிக்கிறன். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவனைப் பார்க்கும் போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. அந்தச் சம்பவம் மீண்டும் மீண்டும் நினைவில வந்து பயமுறுத்துது, செல்வி" நித்தியின் கைகளை நான் மென்மையாகப் பற்றிக் கொண்டேன்.

அடுத்து வந்த நாட்களில் அந்தக் கடையைத் தாண்டிப்போகும் அந்த மனிதரைப் பார்த்தேன். புகைப்பிடித்த படி நிலத்தில் உட்கார்ந்திருந்து வேலை செய்து கொண்டிருந்தார். இந்த மனிதரா இப்படிச் செய்தார்? இப்போதும் வண்டியில் காற்றுக் குறைவாக இருந்தது. "இந்தக் கடைவேண்டாம்" என்று தாண்டிப் போனேன். அடுத்து வந்த கடையில் வண்டியை நிறுத்திக் " காத்தடிக்கவேண்டும் " என்றேன். மேற்சட்டை அணியாத வயதான ஒரு முதியவர் குனிந்து வண்டியில் காற்று நிரப்பிக் கொண்டிருந்தார். அவர் முதுகிலும் ஒரு பெரிய தழும்பு. காயம் ஆறி ஆண்டுக்கணக்கானாலும் வடு அப்படியே இருந்தது. "என்ன தழும்பு அது? " என்று நான் இப்போது கேட்கவில்லை.கேட்காமலேயே புரிந்தது. கடையில் இருந்த வானொலியில் " பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் மேல் காறி உமிழ்ந்துவிடு பாப்பா " என்ற பாரதியார் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எனக்குச் சிரிப்பு வந்தது. "ஓ பாரதி! மீசைக்காரக் கவிஞனே, மோதி மிதிக்கவேண்டாம். துணிந்து ஒரு கேள்வி கேட்கமுடியுமாய்யா இந்த நாட்டில?" என்று கேட்கவேண்டும் போல் இருந்தது. ஒருவேளை நீ இந்த நாட்டில் பிறந்திருந்தால் இப்படிப் பாடியிருப்பாயோ என்னவோ " பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயந்து நடுங்கி விடு பாப்பா, ஓடி ஒளித்துவிடு பாப்பா, அவர் காலில் விழுந்து விடு பாப்பா"

Thursday, June 04, 2009

நானும் எழுதினேன் கவிதையொன்று


புன்னகைப் பூவொன்று உதிர்ந்து போனது
பூமியே கண்ணீரோடு கலங்கலானது
வெண் சுடு மணலிலே பயணம் போன
வெண் புறா துடி துடித்து இறந்து போனது.

பெயரிலே தமிழ் கொண்டு
பெற்றவர் மனம் கொண்டு
தாயக வலம் வந்த
தம்பி தமிழ் செல்வன் இவன்

நோயிலே தவிக்கவில்லை
பாயிலே படுக்கவில்லை
ஆயினும் இன்று அவன்
ஆவியாய்ப் போய்விட்டான்

எல்லாளன் நடவடிக்கையில்
எஞ்சிவிட்ட கழுகிலொன்று
எம் சொல்லாளன் உயிர் பறிக்க
இவன் சொல்லாமல் போய்விட்டான்.

துட்ட கைமுனுவின்
கெட்ட கனவிதென்று
இட்டகர் கூட்டமிங்கு
கொட்டம் அடிக்குதம்மா

பெற்றவள் இந்தமண்ணில்
பெருமூச்சுடன் காத்திருக்க-நீ
பெற்றவை இரண்டும் அங்கு
பேதலித்துப் போயிருக்க
உற்றவள் உன்னை எண்ணி
உறங்காமல் தானிருக்க
அதிகாலை கருக்கலிலே-நீ
அவசரமாய்ப் போனதென்ன

Wednesday, June 03, 2009

என்ன தவறு கண்டீர்?


நேற்று மனிதர்கள்
காற்றில் போயினர்.
இருபதனாயிரம் உயிர் குடித்த
இறுதிப் போர் இது

இந்திரா தேசமெமக்கு உதவும்
என இறுமாந்திருந்தோம்-அது
இரக்கமற்ற தேசமென்று இன்று
நாம் கண்டுகொண்டோம்.

ஓடி ஓடிப் போராட்டம் நடத்தினோம்
ஓயாமல் தெருவெங்கும்
ஓலமிட்டு நாம் அழுதோம்.

இலண்டனின் வீதிகளில்
இராப்பகலாய் நாம் நின்றோம்
கனடாவின் தெருக்களிலும்
கலங்கிப்போய் நாம் நின்றோம்

வாசிங்டன் டிசியிலும்
வாடிப்போய் நாம் நின்றோம்
நோர்வேயின் தலைநகரில்
நொந்து போய் நாம் நின்றோம்

உலகத்தின் தெருக்களெல்லாம்
உறவுக்காய்க் கொடிபிடித்தோம்
உயிரற்ற பிணங்களாக
உணர்வின்றி நாம் விழுந்தோம்

தேற்ற ஒரு நாதியின்றித்
தேசமெங்கும் நாம் அழுதோம்
சாவுக்குக் கணக்கு வைக்க சனம்
சாதியின்றி நாம் இறந்தோம்

காந்தி தேசமும் கிட்லர் தேசமாகிவிட
சீன தேசமும் சாவுமணி எமக்கடிக்க
ஐயா நாம் என்ன தவறு செய்தோம்?
ஐநாவும் கைவிரிக்க

எங்கள் பிணக்குவியலின் மேல்- கட்டி
எழுப்பப்பட்ட போர் வெற்றியிலே
சிங்களவன் மகிழ்ந்திருக்க- முகாம்
சிறைகளிலே நாம் துடிக்க

இனவெறிபிடித்த சிங்களனின் -காம
இச்சைக்கு நாம் பலியாக
நள்ளிரவு வேளையிலேயே- நாயாக
நாம் களையெடுக்கப்பட

எம் உறுப்பறுத்துச் சிங்களவன்
உலகமெலாம் விலைபேச
பொறுப்புள்ள மேற்குலகம்
பேசாமல் கண்ணுறங்க

ஐயா நாம் என்ன தவறு செய்தோம்?
ஐநாவும் கைவிரிக்க

Tuesday, June 02, 2009

காத்திருப்பு


விமானம் பலாலியை நெருங்கிக் கொண்டிருந்தது. " இதோ இன்னும் அரைமணி நேரத்தில் என் தாயக மண்ணைத் தொட்டுவிடுவேன். 1993 இல் ஊரை விட்டுக் கனடா போனபின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இப்போது தான் ஊருக்குத் திரும்பிவருகிறேன். எத்தனையாண்டு கால ஏக்கம். அம்மாவைப் பார்க்கவேண்டும். சகோதரிகள்.. அவர்களின் குழந்தைகள். அப்புறம்.. மீரா. மீரா அவளை எப்போது முதல் முதலில் பார்த்தேன்? " மெல்லக் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டேன். நினைவுகள் மெல்லச் சுழன்றன. 1990 ஆம் ஆண்டு நான் 11ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தத போது சண்டிலிப்பாயிலிருந்து மீராவின் குடும்பம் இடம்பெயர்ந்து எங்கள் வீட்டுக்கு அருகில் குடிபுகுந்திருந்தது. மீராவுக்கு 2 அக்காமார். ஒருவர் பல்கலைக்கழத்தில் படித்துக் கொண்டிருந்தார். மற்றவர் உயர்தரத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். மீரா நேர்வகிடு எடுத்து இரட்டைப்பின்னல் போட்டு மடிப்புக் குலையாத வெள்ளைச்சீருடையில் பள்ளிக்கூடம் வருவாள். தெற்றுப்பல் தெரிய அவள் சிரிக்கும் போது தேவதை போல் இருப்பாள். வகுப்பு இடைவேளையின் போதும் அவள் அரட்டையடித்து நான் பார்த்ததில்லை. கருமமே கண்ணாக எதையாவது படித்தபடி இருப்பாள். 11 ஆம் வகுப்பு முடியும் வரை ஆண்மாணவர்கள் பெண் மாணவிகளோடு பேசக்கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அதனால் மீராவுடன் என்னால் பேசமுடியவில்லை. மீராவின் வருகைக்குப் பின் நான் அடியோடு மாறிப் போயிருந்தேன். முச்சந்தியில் நண்பர்களோடு இருப்பது, கடலுக்கு நீந்தப் போவது, நண்பர்களோடு ஊர்சுற்றுவது போன்றவற்றை அடியோடு தவிர்த்தேன். படிக்கவேண்டும், தேர்வை நன்றாக எழுதவேண்டும் என்ற வெறியோடு படித்தேன். என்னில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் வகுப்புத் தோழர்களுக்குத் தெளிவாகவே புரிந்தது. " என்ன கண்ணன், மீரா வந்த பிறகு அடியோட மாறிட்டாய் போல இருக்கு மச்சான் " என்று கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். சிலர் ஒரு படிமேலே போய் மீரா இருக்கும் போதே " மீரா அழைக்கிறாள். காதல் ராகம் இசைக்கிறாள் " பாடுவார்கள். மீரா வகுப்பிற்குள் நுழையும் போது " வா வா வா கண்ணா வா " என்று பாடிக் கிண்டலடிப்பார்கள். மீராவின் முகம் வெட்கத்தில் சிவந்திருப்பது போல் இருக்கும். மெல்லிய புன்னகை மாறாமல் இருப்பாள். அதை வைத்து மீராவுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்.

11 ஆம் வகுப்பு முடிந்து உயர்தரம் படிக்கப் போனபோது மீரா என்னுடனேயே உயிரியல் பிரிவில் சேர்ந்திருந்தாள். இப்போது ஆண் பெண் மாணவர்களுக்கிடையிலான இடைவெளி குறைந்திருந்தது. மீரா சாதாரணமாக ஆய்வுகூடத்தில் எல்லா மணவர்களுடனும் பேசுவாள். ஆனால் என்னுடன் ஒரு தடவை கூட பேசவில்லை. எனக்கும் மற்ற மாணவிகளிடம் பேசமுடிந்த போதும் மீராவுடன் பேசுவதில் தயக்கம் இருந்தது. நண்பர்கள் இருக்கும் போது மூன்றாம் நபருக்குச் சொல்வது போல் மீராவுடன் நானும் என்னுடன் மீராவும் பேசிக்கொள்வோம். என் பள்ளிக்காலத்தை வசந்தமாக்கியவள் மீராதான். உயர்தரம் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தபோது திடீரென்று ஒருநாள் அப்பா மாரடைப்பால் இறந்து போனார். என் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. இறுதிச்சடங்கின் போது மீரா வீட்டுக்கு வந்து என் அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் துணையாக நின்றாள். அவள் என் குடும்பத்தினரோடு பழகிய விதத்திலிருந்து அவள் மீதான என் மதிப்பும் காதலும் பெருகிப் போனது. ஆனால் என்னையே நம்பியிருக்கும் என் சகோதரிகளின் வாழ்க்கை என் காதலை அவளுக்கு வெளிப்படுத்தத் தடையாகவே இருந்தது. என் வீட்டுப் பொருளாதாரமும் குடும்பபாரமும் என்னை அழுத்திய போது என் தாய்மாமா என்னை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கமுன் வந்தார். வெளிநாட்டுக்குப் புறப்படுவதற்கு முன் மீராவிடம் என் காதலை வெளிப்படுத்தி விடலாமா என்று சிந்தித்தேன். "19 வயதில் என்ன காதல் வேண்டிக்கிடக்கு? உன் குடும்பத்தை விட உன் சுயநலம் தான் முக்கியமா" என்று அவள் என்னை கேட்டுவிட்டால்?

மீரா எங்கே போகப் போகிறாள்? இங்கே தானே இருக்கப் போகிறாள். வெளிநாட்டுக்குப் போய் சம்பாதித்து என் குடும்பச்சுமையை இறக்கி வைத்துவிட்டு ஓரிரு ஆண்டுகள் கழித்துக் கூட அவளிடம் என் காதலை வெளிப்படுத்தலாம் என்று நம்பினான். என் நம்பிக்கை மீது இடிவிழுந்தது போல் 1995 இல் ஏற்பட்ட இடம்பெயர்வு இருந்தது. 1996 இல் எல்லோரும் ஊருக்குத் திரும்பியபோது மீராவின் குடும்பம் அங்கு திரும்பி வரவில்லை என்று அம்மா கடிதத்தில் எழுதியிருந்தார். ஊரிலிருக்கு என் நண்பன் மூலமாக மீரா எங்கிருக்கிறாள் என்று விசாரித்துப் பார்த்தேன். "மீராவைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. ஒருவேளை அவள் வன்னிக்குப் போயிருக்கக் கூடும் "என்று அவன் கடிதம் எழுதியிருந்தான். "நினைவுகளோடு என்னைத் தவிக்கவிட்டு நீ மட்டும் எங்கோ தூரத்தில் மீரா" என்று புலம்பினேன். அம்மா எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் மீரா என்ற சொல்லைத் தேடினேன். இந்தப் பத்தாண்டு காலத்தில் என் அக்காவுக்கு மூத்த தங்கைக்கும் ஊரிலேயே படித்த பையன்களாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தேன். கடைசித் தங்கைக்கு கனடாவில் ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைத்தேன். ஊரிலிருந்த வீட்டைத்திருத்தி அம்மாவுக்குக் கொடுத்தேன்.என் சுமைகளையெல்லாம் நான் இறக்கிவைத்தபின், கடந்த 2 ஆண்டுகளாக அம்மா "எப்போது நீ திருமணம் செய்யப் போகிறாய்? பொம்பிளை பார்க்கவா "என்று நச்சரித்துக் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தாள். என்னால் மீராவை மறக்கமுடியவில்லை. அவளை எப்போதாவது சந்திப்பேன். அவள் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்ற நம்பிக்கை அடிமனதில் இருந்து கொண்டே இருந்தது. என் நம்பிக்கை வீண் போகாமல் இரண்டு வாரத்திற்கு முன் எழுதியிருந்த கடிதத்தில் அம்மா "மீராவின் அம்மாவை நல்லூர்த் திருவிழாவில் கண்டேன். கூட்ட நெரிசலில் கனக்க கதைக்கமுடியவில்லை. கல்வியங்காட்டில் இருக்கினமாம். வீட்டுக்கு வரச்சொன்னவா " என்று எழுதியிருந்தார். மீரா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டேன் என்ற மகிழ்ச்சியில் அவசர அவசரமாக வேலைக்கு விடுப்பெடுதேன். விமானச்சீட்டு வாங்கினேன். கொழும்புக்கு வந்து இதோ யாழ்ப்பாணத்தை நோக்கி, என் தாய்மண்ணை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறேன்.

விமான நிலையத்தில் இறக்கி நான் வீட்டுக்கு போன போது அம்மா ஓடி வந்து என்னைக் கட்டியணைத்துக் கொண்டார். சகோதரிகளின் குழந்தைகள் "மாமா மாமா" என்று என்னோடு வந்து ஒட்டிக்கொண்டன. 10 ஆண்டு பிரிவு, பிரிவுக்கு முன்னான வாழ்க்கை, யாழ் இடப்பெயர்வின் போது பட்ட துயரம் போன்றவற்றைக் கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேரமாற்றத்தால் இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. என் அறை சாளரத்தினூடாக மீரா குடியிருந்த வீட்டை எட்டிப்பார்த்தேன். ஆள் நடமாட்டமற்றுப் பற்றை மண்டிப் போய்க் கிடந்தது. முன்பெல்லாம் மீராவின் குடும்பமும் எங்கள் குடும்பமும் எங்கள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து இரவு 9 மணிவரை கதைபேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். இப்போதோ மாலை 6 மணிக்கே ஊர் ஆளரவமற்றுப் போய் விடுகிறது. 6 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு போவதென்றால் கூட இராணுவத்திடம் அனுமதி பெற்றே போகவேண்டியிருக்கிறது. அடுத்த நாட்காலை "நல்லூர் கோவிலுக்குப் போகலாமா? "என்று அம்மாவைக் கேட்டேன். அம்மா சரி என்று தலையசைத்தார். நல்லூர் கோவிலுக்குப் போய் அப்படியே கல்வியங்காட்டிலிருக்கும் மீரா வீட்டுக்குப் போவதே என் திட்டமாக இருந்தது. ஒவ்வொரு சோதனைச் சாவடியாக கடந்து என் கடவுச்சீட்டைக் காட்டி அவர்கள் கேட்கும் கேள்விக்கு கோபப்படாமல் பதிலளித்து எரிச்சலுற்றிருந்த என்னைப் பார்த்து அம்மா சிரித்தார். " 96இல இருந்து எங்கட வாழ்க்கை இது தான் கண்ணா. உனக்கு இது புதுசாத் தான் இருக்கும். போகப் போகப் பழகிவிடும் " என்றார் அம்மா. நல்லூர் அப்படியே இருந்தது. கண்களை இறுகமூடிக்கொண்டேன். " முருகா, என் மீராவை எனக்குக் கொடு " என்று மனமுருக வேண்டினேன். மீராவுக்குத் திருமணம் ஆகியிருக்குமா? ஒரு வேளை ஆகியிருந்தால்...? என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது." சேச்சே, மீராவுக்கு திருமணமாகியிருக்காது. அவளுக்கு மேல் 2 அக்காமார் இருக்கினம். அவைக்கு முடிஞ்சு தான் மீராவைப் பற்றி யோசிப்பினம்" என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். இன்றைக்கு என் விருப்பத்தை அம்மாவுக்கு சொல்லவேணும். கோவிலிலை வைச்சு சொல்வது தான் சரியா இருக்கும். தேரடி மணலில் உட்கார்ந்து மெதுவாக அம்மாவிடம் சொல்லலாம் என்று திட்டமிட்டேன். இப்போது மனம் சஞ்சலமற்றிருந்தது.

கோவில் உள்வீதியைச் சுற்றிவிட்டு வெளியேறிய போது மீரா எதிர்பட்டாள். மீரா, என் மீரா. சேலையில் அழகாக..இது என்ன குங்குமமா நெற்றியில்? அதிர்ச்சியில் என் கண்கள் அவள் கழுத்தைப் பார்த்தது. தாலி. மீரா, உனக்குத் திருமணமாகிவிட்டதா? ஐயோ என்று கதறவேண்டும் போல் இருந்தது. "இது யார் கண்ணனா? கண்ணன் தானே? எப்ப கனடாவில் இருந்து வந்தனீங்கள்?" வாழ்க்கையில் மீரா முதன்முதலாக என்னைப் பார்த்து நேரடியாகப் பேசினாள். அவளைப் பார்த்து "எப்படியிருக்கிறாய் மீரா? உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா? உன் கணவர் என்ன செய்கிறார்? " என்று என்னால் கேட்கமுடியவில்லை. அவள் "அக்காமார் திருமணம் செய்து வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள்" என்றாள். அப்பா இறந்து போய்விட்டார்" என்றாள். ஏதேதோ சொன்னாள். தன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. என் அம்மாவைக் கட்டியணைத்துக் கண்கலங்கினாள். எனக்கு ஓ என்று அழவேண்டும் போல் இருந்தது. என் 12 ஆண்டுகால கனவு கலைந்து போன ஆதங்கத்தில் மனம் விம்மியது. வரும் வழியில் நான் எதுவும் பேசவில்லை. அம்மா தான் பேசினார். " பாவம் மீரா, கலியாணம் முடிச்சு 2 மாசத்தில் புருசன் காணமல் போய்விட்டான். ஏறாத கோவிலில்லை. இறங்காத குளமில்லை. மனித உரிமை அமைப்பு அது இது என்று போய் பதிவு செய்து பார்த்துது. 4 வருசமா தன்ர மனுசன் தனக்கு கிடைப்பார் என்று காத்திருக்குது. படுபாவியள், சுட்டுக் கொன்றிருந்தாலாவது ஒரு வருசமோ இரண்டு வருசமோ அழுது போட்டு மனசைத் தேற்றிக் கொண்டிருக்கும். எல்லோரும் இன்னொரு கலியாணம் செய்யச் சொல்லிக் கேட்டுப்பாத்திட்டினம். கடைசிவரைக்கு முடியாது என்று மறுத்திட்டுது. தன்ர மனுசன் உயிரோடு தான் இருப்பார். எண்டைக்காவது ஒருநாள் திரும்பி வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்குது " என்று அம்மா சொல்லிக் கொண்டே போனாள்.

அடுத்து வந்த 2 வாரமும் மீரா மீது எனக்கிருந்த காதலைத் தாண்டி அவள் வாழ்க்கை வீணாகிப் போன வருத்தமே என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அம்மா மறுபடியும் திருமணப் பேச்செடுத்தார். நான் பதில் சொல்லவில்லை. விடுமுறை முடிந்து நான் கனடா திரும்பும் நாள் வந்தது. விமானநிலைய வாசல்வரை அம்மா வந்தார். கண்கலங்கினார். அடுத்த தடவை ஊருக்கும் வரும் போது மனைவியோடு தான் வரவேண்டும் என்றார். நான் விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன். மீரா மனக்கண் முன் தோன்றினாள். " மீரா, காணமற் போன உன் கணவன் உயிரோடு திரும்பமாட்டான் என்று தெரிந்தும் உனக்கேன் இந்தப் பிடிவாதம்? உனக்கிருக்கிருக்கும் இந்த வைராக்கியம் எனக்கிருக்காதா? இல்லாத உன் கணவனுக்காய் நீ நம்பிக்கையோடு காத்திருக்கும் போது இருக்கும் உனக்காக நான் நம்பிக்கையோடு காத்திருக்கக் கூடாதா? உன் மணவாழ்வு மகிழ்ச்சியானதாய் இருந்திருந்தால் இந்தக் காத்திருப்புக்கான தேவை இருந்திருக்காதே மீரா. காவிய மீரா கண்ணனுக்காக காத்திருந்தாள். இங்கோ கண்ணன் மீராவுக்காக காத்திருக்கிறான். மீராவும் காத்திருக்கிறாள். கண்ணனுக்காக அல்ல. தன் கணவனுக்காக. சாளரத்தின் வழியே கீழே எட்டிப்பார்த்தேன். தூரத்திலே என் தாயகம் புள்ளியாய்,கண்ணீர் துளிபோல்.

Monday, June 01, 2009

இது ஒரு காதல் கதை


வழக்கம் போல மளிகைக் கடையில் சாமான் வாங்கிவிட்டு வெளியே வரும் போது அந்த முகம் எதிர்ப்பட்டது. எங்கேயோ பார்த்த பழகிய முகம். நீண்ட நாள் பழகிய முகம். சட்டென்று நினைவில் வரவில்லை. வண்டிக்குள் ஏறி உட்கார்ந்த போது " நான் தேடும் செவ்வந்திப் பூவிது" என்று இளையராசா உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார். சட்டென்று அந்த முகம் நினைவிற்கு வந்தது. சிவா மாமா!. வண்டியை நிறுத்திவிட்டு மறுபடியும் கடைக்குள் ஓடினேன். அவர் குனிந்து எதையோ தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது."சிவா மாமா" கொஞ்சம் உரக்கவே கூப்பிட்டேன். அவர் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். ஒரு கணம் கடையில் இருப்பவர்கள் என்னைத் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு "நீங்கள் சிவா.., விளாத்தியடி சிவா மாமா தானே? " என்றேன். "ஓம், நான் சிவா தான். நீங்கள்..?" அவருடைய குரலில் அந்தப் பழைய கம்பீரம் இருக்கவில்லை. தலை முடி நரைத்துப் போய் 4 நாட்கள் மழிக்காத தாடியோடு இருந்தார். என்னால் நம்பமுடியவில்லை. அவரின் கூர்மையான விழிகளைத் தவிர மற்றவையெல்லாம் மலர்ச்சி இழந்து போய்க் காணப்பட்டது. முன்பு சிவா மாமா கமலகாசன் போல் இருப்பார். ஊரில் எல்லோரும் அவரை அப்படித்தான் சொல்வார்கள். " நான் செல்வி.." அதற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை. " எந்த செல்வி...? " என்று கேட்டவர் பின்னர் திகைத்த பார்வை பார்த்தார். " நீங்கள் எப்ப இங்க வந்தனீங்கள்? கனகாலமோ?...சின்னக் குழந்தையாக பார்த்தது " அவருடைய பார்வை என்மேல் நிலைக்குத்தி நின்றது. " 2 வருசமாச்சு இங்க வந்து... நீங்கள் எங்க இருக்கிறீங்கள்? தனியாவா வந்தனீங்கள்? ..." அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? குழந்தைகள் இருக்கின்றனவா என்று கேட்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் முடியவில்லை." நான் இங்க பக்கத்தில தான் பொடியளோட சேர்ந்து ஒரு வீடு எடுத்திருக்கிறன். பொடியள் கடையில் வாங்கிச் சாப்பிடுவாங்கள். நான் தான் சமைக்கவேணும்..இங்க தான் தமிழ்க்கடைக்கு வாறனான்... " என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது.ஆக, சிவா மாமாவுக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கு மேலும் அவரோடு பேசும் தைரியம் எனக்கிருக்கவில்லை. விடைபெற்றுக் கொண்டேன். வண்டியில் " மங்கைக்குள் என்ன நிலவரமோ " என்று இளையராசா பாடிக்கொண்டிருந்தார்.என் மனமோ கலவரப்பட்டுப் போய்க் கிடந்தது.

1987 அப்போது சிவா மாமாவுக்கு இருபத்தைந்து வயதிருக்கக் கூடும். எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் முச்சந்தியில் நண்பர்களோடு உட்கார்ந்திருப்பார். பக்கத்துவீட்டு மலரக்காவோடு நான் பள்ளிக்கூடம் போவேன். மலரக்கா உயர்தர வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். நாங்கள் முச்சந்தியைத் தாண்டும் போது சிவா மாமா "மலரே குறிஞ்சி மலரே" என்று பாடத்தொடங்குவார். மலரக்கா முகத்தை மற்றப்பக்கம் திருப்பிக் கொள்வார். என் கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டு முச்சந்தியைத் தாண்டிப் போவார். முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு "பொறுக்கி" என்று முணுமுணுப்பார். மலரக்காவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஒவ்வொரு வெள்ளியும் விரதம் இருப்பார். வயலுக்கு நடுவில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு பூமாலை கட்டிக் கொண்டு போய்க் கொடுப்பார். ஒவ்வொரு வெள்ளியும் நாங்கள் கோவிலுக்குப் போகும் போதும் கோவில் வாசலில் இருக்கும் அரசமரத்தின் கீழ் சிவா மாமா உட்கார்ந்திருப்பார். மலரக்காவைப் பார்த்துப் புன்னகைப்பார். பதிலுக்கு எந்த உணர்ச்சியையும் காட்டாது கருமமே கண்ணாக சாமி கும்பிடுவார் மலரக்கா. ஆனால் மலரக்கா எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் சிவா மாமா அவரை நிழல் போல தொடர்ந்து கொண்டிருப்பார். எனக்கு அவரைப் பார்க்கும் போது கழிவிரக்கம் தோன்றும். அன்றும் ஒரு வெள்ளிக் கிழமை நான் வழக்கம் போல் மலரக்காவோடு கோவிலுக்குப் போனேன். அரசமரத்தின் கீழ் சிவா மாமாவைக் காணவில்லை. கோவிலுக்குள் சென்றபின்னர் மலரக்காவின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. முகத்தில் ஒருவித ஏமாற்ற உணர்வு தெரிந்தது. உள்வீதியைச் சுற்றிவிட்டு நாங்கள் வெளியே வரும் போது வாசலில் சிவா மாமா எதிர்ப்பட்டார். மலரக்கா ஒரு கணம் திகைத்துப் போய் பின்னர் சுதாரித்துக் கொண்டு "செல்வி, வா போகலாம் "என்று என் கையைப் பற்றி இழுத்தார். " மலர் நில்லும். நான் உம்மோட கதைக்கவேணும்." என்று வழியை மறித்தார் சிவா மாமா. "போகவிடுங்கோ, யாராவது பார்த்தா எனக்குத் தான் பிரச்சனை வழியை விடுங்கோ " என்றார் மலரக்கா. சிவா மாமா எதுவும் பேசவில்லை. சட்டைப்பையிலிருந்து ஒரு கடதாசியை எடுத்தார். கோவில் படியில் அதனை வைத்து அது காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் ஒரு கல்லை வைத்தார். நிமிர்ந்து பொருள் நிறைந்த பார்வை ஒன்றை மலரக்கா மீது வீசி விட்டு மிதி வண்டியில் ஏறிப் போனார். மலரக்கா எதுவும் பேசவில்லை. படியை நெருங்கும் போது திடீரென்று குனிந்து அந்த காகிதத்தை எடுத்தார். அர்ச்சனைத் தட்டின் கீழ் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டார்.

ஒரு சில மாதங்கள் சென்றபின் ஒருநாள் மலரக்கா வீட்டுக்குப் போனபோது வீடே அமளிப்பட்டுக் கொண்டிருந்தது. மலரக்காவின் பெற்றோர் கோபமாக மலரக்காவைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் நடுவே சிவா மாமாவின் பெயரும் அடிபட்டது. " அவன் ஒரு உதவாக்கரை. வேலை வெட்டி இல்லாதவன். எங்கட தகுதி என்ன? அவன்ர தகுதி என்ன இண்டையோட எல்லாத்தையும் மறந்திடவேணும். மீறி ஏதாவது நடந்தா பெத்தமகள் என்று பாக்கமாட்டன்" என்று மலரக்காவின் அப்பா கத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. கொஞ்ச நேரம் கழித்த தழுதழுத்த குரலில் " பிள்ளை, நீ எங்களுக்கு ஒரு பொம்பிளைப்பிள்ளை. உன்னை நல்ல வசதியான இடத்தில செய்து கொடுக்கவேணும். நீ நல்லா இருந்தா தான் எங்களுக்கு நிம்மதி. சிவாவின்ர குடும்பம் சரியான கஸ்டப்பட்ட குடும்பம். அவனுக்கு அப்பா இல்லை. இரண்டு தங்கைச்சிமார் இருக்கினம். நிறையப் பொறுப்பு. நீ அந்த குடும்பத்தில போய் கஸ்டப்படவேண்டாம் " என்று மலரக்காவின் அம்மா கெஞ்சுவது கேட்டது. நான் வீட்டுக்குள் நுழைந்தேன். மலரக்கா அழுது கொண்டிருப்பார் என நினைத்தேன். மாறாக அவரின் முகம் இறுக்கமாக இருந்தது. சலனம் இன்றி நேராகப் பெற்றோரைப் பார்த்தார். " அப்பா, அம்மா செய்தால் நான் சிவாவைத் தான் செய்வேன். அந்த முடிவில எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் சொன்ன தகுதி கிகுதி எல்லாம் எனக்குப் பெரிசாத் தெரியல்லை. இது தான் என்ர முடிவு " என்று மெல்லிய ஆனால் அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்குள் போனார். மலரக்காவின் துணிச்சல் வியப்பைக் கொடுத்தது.

ஒரு சில மாதங்கள் கழித்து மலரக்காவுக்கு ஆசிரியர் நியமனகடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போய் கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்தார். அரசமரத்தின் கீழ் சிவா மாமா. " மலர், இங்கை இருந்து என்னால எந்த தொழிலும் செய்யமுடியாது போல இருக்கு. ஒரே பிரச்சனை. தோட்டத்தில் வேலை செய்யேக்க வந்து இராணுவம் பிடிச்சுக் கொண்டு போறாங்கள். நான் வெளிநாடு போறதுக்கு முயற்சி செய்யப் போறன்" மலரக்கா நிமிர்ந்து சிவா மாமாவைப் பார்த்தார். மலரக்காவின் கண்கள் குளமாகி இருந்தன. " மலர், ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்? என்ன நடந்தது? " சிவா மாமா பதற்றத்தோடு கேட்டார். "சிவா, எனக்குப் பயமா இருக்கு. நீங்கள் வெளிநாட்டுக்குப் போனால் என்னை மறந்திடுவீங்களோ என்று". சிவா மாமா மலரக்காவின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். " மலர், என்ன விசர் கதை கதைக்கிறீர்? உம்மை நான் கைவிடுவனா? இந்த அம்மன் கோவிலுக்கு முன்னால வைச்சு சொல்லுறன் நீர் தான் என்ர மனுசி. நான் எந்தக்காலத்திலையும் மாறமாட்டன்." மலரக்கா தலையைக் குனிந்து நிலத்தை நோக்கிக் கொண்டிருந்தார். " எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைச்சிருக்கு. அப்பா அம்மாவுக்கு நான் வேலைக்குப் போறதில பெரிசா விருப்பம் இல்லை. ஆனால் படிச்சிட்டு வீட்டில இருக்க எனக்கு விருப்பமில்லை. அது தான் வேலைக்குப் போகலாம் என்று இருக்கிறன் " என்று மெல்லிய குரலில் சொன்னார் மலரக்கா. " மலர், நீர் தாராளமா வேலைக்குப் போகலாம். உமக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்யும். நான் வெளிநாட்டுக்குப் போய் நன்றாக உழைக்கவேணும். எனக்கு வீட்டில் பொறுப்பு இருக்கு. உமக்குத் தெரியும் தானே? எப்பிடியும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் அந்தப் பொறுப்பெல்லாம் செய்து முடித்துவிடுவன். அதுக்குப் பிறகு உம்மை நான் வெளிநாட்டுக்குக் கூப்பிடலாம். அதுவரைக்கு காத்திருப்பீர் தானே? " என்றார் சிவா மாமா. மலரக்கா சிவா மாமாவைப் பார்த்துப் புன்னகைத்தார். " கவலைப்படாதேங்கோ சிவா, நான் எப்பவும் உங்கள் மலர் தான். ஐந்தாறு ஆண்டானாலும் காத்திருப்பன் " என்றார். அந்த சந்திப்பின் பின்னர் சிவா மாமாவை ஊரில் பார்க்கமுடியவில்லை. அதுவே அவர்களிருவரினதும் கடைசி சந்திப்பாக இருந்தது.

ஒரு சில மாதங்கள் கழித்து சிவா மாமா கனடா போய்ச் சேர்ந்து விட்டதாக ஊரில் பேசிக் கொண்டார்கள். மலரக்காவுக்கும் யாழ் தீவுப்பகுதியில் இருக்கும் ஒரு பாடசாலையில் ஆசிரியர் வேலை கிடைத்திருந்தது. ஊரில் இருக்கும் ஒரு நண்பர் மூலமாக மலரக்காவுக்கு சிவா மாமா கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். மலரக்காவின் பெற்றோரின் எதிர்ப்பும் குறைந்திருந்தது. மலரக்கா சேலை கட்டி தலையில் ஒற்றை ரோசாப்பூவுடன் பேருந்தில் ஏறிப் பள்ளிக்கூடம் போவார். காலையில் தலை முழுகி தன் நீண்ட கூந்தல் காற்றில் ஆட அவர் போவதைப் பார்க்கும் போது தேவதைபோல் இருப்பார். சிவாமாமா மட்டும் இப்போது இங்கிருந்தால் மலரக்கா வேலைக்குப் போகும் அழகைப் பார்த்து ரசித்திருப்பார் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காலையில் நேரத்திற்கே எழுந்து பள்ளிக்குப் போன மலரக்கா மாலை 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை. மலரக்காவின் அம்மா வாசலையே பார்த்தபடி பதற்றத்தோடு உட்கார்ந்திருந்தார். மலரக்காவின் சித்தப்பாவின் மகன் திடீரென்று வீட்டுக்கு வந்தான். " பெரியப்பா, மலரை நீர்வேலி சோதனைச் சாவடியில வைச்சு என்னோட படிக்கிற பெடியன் பார்த்தவனாம். ஏதோ விசாரணை என்று முகாமுக்குள்ள கூட்டிக்கொண்டு போனவங்களாம்." என்றான் பதற்றமாக. மலரக்காவின் அம்மா தலையில் கைவைத்து அழத்தொடங்கினார். மலரக்காவின் அப்பா என் வீட்டுக்கு ஓடி வந்தார். என் அப்பாவோடு ஏதோ பேசினார். ஊரைச்சேர்ந்த நாலைந்து ஆண்களையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டுப் போனார்கள். அப்பா வீடு திரும்பும் போது இரவு 10 ஐத் தாண்டி இருந்தது. எனக்குத் தூக்கம் வரவில்லை. மலரக்காவுக்கு என்ன நடந்தது என்ற கவலை என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அடுத்தநாள் காலையிலும் அப்பாவும் வேறு சில ஆண்களும் வெளியே போனார்கள். அவர்கள் போன எல்லா இராணுவ முகாம்களிலும் மலர் என்று யாரையும் தாங்கள் கைது செய்யவில்லை என்று கைவிரித்து விட்டார்கள். அப்பா வீட்டுக்கு வந்து உடைமாற்றப் போகும் போது மலரக்கா யாழ் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. அப்பா மலரக்காவின் பெற்றோரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். 4 நாட்கள் கழித்து மலரக்கா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார்.

மலரக்கா வீட்டுக்கு வந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரைப் பார்க்க ஆவலோடு அவர் வீட்டுக்கு ஓடினேன். வரவேற்பறையில் மலரக்காவின் அம்மா சோர்ந்து போய் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார். அறைக்குள் மலரக்கா உட்கார்ந்திருந்தார். நான் உள்ளே போனபோது வழக்கமாக அவர் முகத்தில் இருக்கும் மலர்ச்சி இல்லாமல் இருந்தது. முகத்திலும் கைகளிலும் அங்கங்கே காயக்கோடுகள். எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி இறுக்கமாக உட்கார்ந்திருந்தார். நான் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. அரைமணி நேரமாக மலரக்காவின் பார்வை எங்கேயோ நிலைகுத்தியிருந்தது. வாசலில் தபாற்காரனின் மணியோசை கேட்டது. மலரக்கா துள்ளி எழுந்து ஓடிப்போய் கடிதத்தை வாங்குவார் என்று எதிர்பார்த்தேன். மலரக்கா எழவில்லை. அவரின் அம்மாவும் எழவில்லை. நான் ஓடிப்போய் தபாற்காரனிடம் கடிதத்தை வாங்கினேன். கடிதத்தின் மேல் உறையில் கனடா நாட்டுமுத்திரையைப் பார்த்ததும் சிவா மாமாவின் கடிதம் என்று புரிந்தது. கடிதத்தை வாங்கிக் கொண்டு உற்சாகத்தோடு உள்ளே போனேன். மலரக்கா இதனைப் பார்த்தால் நிச்சயம் துள்ளிக் குதிப்பார். நான் பூனை போல் மெதுவாகப் பதுங்கிப் போய் திடீரென்று அந்தக் கடிதத்தை மலரக்காவின் முன் நீட்டினேன். மலரக்கா அந்தக் கடிதத்தை கையில் வாங்கிக் கொண்டார். அதனைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு வீரிட்டு அழத்தொடங்கினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை."மலரக்கா, அழாதேங்கோ" என்று மென்மையாக அவர் கையைப் பற்றிக் கொண்டேன். மலரக்கா என்னை வாரி அணைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதார். நான் திகைப்போடு அவர் அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன்.

அடுத்தநாள் அதிகாலை மலரக்காவின் அம்மாவின் அழுகுரல் கேட்டு கண்விழித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக மலரக்காவின் வீட்டில் கூட்டம் கூடத்தொடங்கியது. அம்மாவும் அப்பாவும் மலரக்கா வீட்டுக்குப் போனார்கள். சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு மாலையில் அழுகுரல்கள் கொஞ்சம் ஓய்ந்திருந்தன. நான் மலரக்கா வீட்டுக்குப் போனேன். மலரக்காவின் புகைப்படத்திற்கு மாலையிட்டு விளக்கு ஏற்றியிருந்தார்கள். வீடு இருண்டு போய் கிடந்தது. மலரக்கா அந்த வீட்டில் இல்லை என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. நான் மலரக்காவின் அறைக்குள் நுழைந்து மின்விளக்கைப் போட்டேன். அவரின் படுக்கையறையில் சிவா மாமாவின் கடிதம் உடைக்காமலேயே கிடந்தது. அதன் மேலுறையில் " உங்கள் கடிதத்தை வாசிக்கும் தகுதியை நான் இழந்துவிட்டேன் சிவா " என்று மலரக்கா எழுதியிருந்தார். மலர் என்ற அந்த மெல்லியபூ ஏன் வாடிப்போனது? எப்போதுமே துணிவோடு இருக்கும் மலரக்கா எதற்காக மரணத்தைத் தேடி தன்னையே அழித்துக் கொண்டார்? சிவாமாமாவின் காதலைக்கூட மறந்து மலரக்கா மரணத்தைத் தேடிக்கொள்ள யார் காரணம்? எனக்குப் புரியவே இல்லை.

பின்னால் வாகனங்களின் ஒலிகேட்டு திடீரென்று சுயநினைவிற்கு வந்தேன். இளையராசா பாடி ஓய்ந்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்ததும் சிவா மாமாவின் முகம் அடிக்கடி நினைவிற்கு வந்தது. மலரக்காவின் மீது எனக்கு கோபம் வந்தது. மரணம் என்ற முடிவுக்குப் போகுமுன் ஒருகணம் சிவா மாமாவை நினைத்துப் பார்த்தாயா, மலரக்கா? என் ஐந்து வயதில் நான் பார்த்த அந்த காதல் கதையின் முடிவு எதனால் இப்படியானது? மனச்சோர்வோடு தூங்கப்போனேன். " இந்த அம்மன் கோவிலுக்கு முன்னால வைச்சு சொல்லுறன். நீர் தான் என்ர மனுசி. நான் எந்தக்காலத்திலையும் மாறமாட்டன் " என்று சிவாமாமா 20 ஆண்டுகளுக்கு முன் சொன்னது மீண்டும் மீண்டும் என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

Sunday, May 31, 2009

மிட்டாய்

1988ஆம் ஆண்டில் ஒருநாள், என் தங்கை பிறந்து கைக்குழந்தையாக தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள். அத்தனை நாளும் வீட்டில் அம்மாவுக்கு உதவியாக குழந்தை பராமரிப்புக்கு நின்ற என் அம்மம்மாவும் தோட்டவேலை அதிகமாக உள்ளது என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குச் சென்றுவிட்டார். வீட்டில் நானும் தம்பியும் அம்மாவும் அப்பாவும் புதிதாகப் பிறந்த என் தங்கையும் இருந்தோம். தங்கை மரத்தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தாள். எனக்கு என் தங்கையைத் தூக்கி மடியில் வைத்திருக்கவேண்டும் என்ற அவா இருந்தது. ஒவ்வொரு தடவை அம்மாவிடம் கேட்கும் போது நீ சின்னப்பிள்ளை, குழந்தையை சரியாகத் தூக்கமாட்டாய். கொஞ்சம் வளர்ந்ததும் நீ அவளைத்தூக்கலாம் என்று சொல்வார். தங்கை தூங்கும் போது மட்டும் அம்மாவின் கண்காணிப்பில் என் மடியில் வைத்திருப்பேன். அன்றும் அப்படித்தான் தங்கை பால் குடித்து விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மா தங்கைக்கு ஆக்கினை செய்யாதே. அவள் தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு வீட்டுவேலைகள் செய்து கொண்டிருந்தார். திடீரென்று நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக கேட்கத்தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரும்பு காலணிகளின் ஓசை கேட்கத் தொடங்கியது. இப்போது நாய்கள் வெறிகொண்டவை போல் குரைக்கத் தொடங்கின. நான் வீட்டுச் சாளரத்தினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். சாளரக்கம்பிகளைப் பிடித்தபடி மிரண்டு போன விழிகளோடு நானும் தம்பியும் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். " ஆமி வாறான் போல இருக்கு " என்று சொல்லிவிட்டு அம்மா தன்னுடைய வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். வீட்டில் அந்த நேரத்தில் லைக்கோன் கோழிப்பண்ணை வைத்திருந்தோம். கொல்லைப் பக்கம் எலுமிச்சை காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவுக்கு தன்னுடைய கோழிகள் இந்திய இராணுவத்தின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்ற அச்சம் அதிகமாக இருந்தது. கோழிகளை உரிமையாளரின் அனுமதியின் அபகரித்துக் கொண்டு போவது இந்திய இராணுவத்தின் வழக்கம். திடீரென்று வாசல் படலையைத் திறந்து கொண்டு 8 பேர் கொண்ட இராணுவக் குழு ஒன்று எங்கள் வளவிற்குள் நுழைவது தெரிந்தது. அப்பா உடனே சுதாரித்துக் கொண்டு " ஆமி வீட்டுக்குள் வரப்போகின்றான். அதற்கு முன் எல்லோரும் வெளியேற வேண்டும் " என்று கத்தினார். அம்மா தூங்கிக் கொண்டிருந்த தங்கையைத் தூங்கினார். அப்பா தம்பியைத் தூக்கினார். வீட்டின் முன் கதவைத் திறந்து கொண்டு எல்லோரும் முற்றத்திற்கு வரும் போது இராணுவம் எங்கள் வீட்டுமுற்றத்திற்கு வரவும் சரியாக இருந்தது. நான் மிரண்ட விழிகளோடு இராணுவத்தைப் பார்த்தேன். யாருடைய முகத்திலும் நட்புணர்வு இருக்கவில்லை. ஆயுதம் தாங்கிய மிருங்களாக அவர்கள் என் கண்ணுக்குத் தெரிந்தார்கள். அப்பாவிடம் அரைகுறை ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார்கள். தங்களுக்குள் இந்தி மொழியில் ஏதேதோ பேசினார்கள். திடீரென்று ஒருவன் தன் சப்பாத்துக் காலால் அப்பாவை உதைந்தான். பின்னர் துப்பாக்கி முனையில் அப்பாவை நான்கு பேர் வீட்டின் கொல்லைப்புறம் கொண்டு போனார்கள். அப்பாவுக்குப் பின்னால் அம்மாவும் போகமுயற்சிக்க இன்னொருவன் அம்மாவின் கழுத்தில் துப்பாக்கியை வைத்தான். அப்பா கலங்கிய விழிகளோடு அம்மாவைப் பார்த்து எந்த சூழ்நிலையிலும் வீட்டுக்குள் போகாதே என்று அம்மாவை எச்சரித்து விட்டு இராணுவத்தோடு சேர்ந்து கொல்லைப் புறம் போனார். பிள்ளை நீ கொல்லைப்பக்கம் போ. அப்பாவை என்னவோ செய்யப் போகிறார்கள். போய் அப்பாவோடு நில். நான் இங்கு சமாளிப்பேன் என்று கத்தினார். நான் அப்பாவுக்கு பின்னால் கொல்லைப் புறம் போனபோது நாலைந்து இராணுவ மிருகங்கள் சேர்ந்து அப்பாவைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பா வலியால் துடிப்பது தெரிந்தது. வலியைத் தாங்கியபடி அப்பா பிள்ளை நீ அம்மாவோடு போய் நில். அம்மாவைத் தனியாக விடாதே என்று கத்தினார். நானும் தம்பியும் அம்மாவிடம் ஓடினோம். நாங்கள் முற்றத்தில் அம்மா இருக்குமிடத்திற்கு போனபோது நாலுபேர் அம்மாவை சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். ஒருவன் அம்மாவின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தி வீட்டுக்குள் போ என்று மிரட்டிக் கொண்டிருந்தான். அம்மா தங்கையை இறுக்கி அணைத்தபடி நான் வீட்டுக்குள் போகமாட்டேன். ஏன் போகவேண்டும் என்று சத்தமாகக் கேட்டார். உன்னுடைய அறையில் நீ ஆயுதம் வைத்திருக்கின்றாய். அதை சோதிக்கவேண்டும். கதவைத் திற. என்றான் ஒருவன். அம்மா கையிலிருந்த வீட்டுத்திறப்பை வீசினார். போ. போய் நன்றாகச் சோதனை செய். ஆயுதம் இருந்தால் கண்டு பிடி. ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லியபடி முற்றத்தில் உட்கார்ந்தார். ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து சுவரில் தொங்கிய என் மாமாமாரின் படத்தை எடுத்து வந்தான். யாரிது என்று என்று அம்மாவை அவன் கேட்டான். அவர்கள் என் இறந்து போன சகோதர்கள் என்று அம்மா சொன்னார். "எப்படி செத்தது? புலி தானே. இரண்டு புலி " என்று ஆணவச்சிரிப்பு சிரித்தான் ஒருவன். அம்மா உரத்தகுரலில் புலி இல்லை. புலிக்கும் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. என்று அம்மா கத்தினார். எங்களுக்கு சந்தேகம் உள்ளது. "உன்னுடைய படுக்கையறையில் ஆயுதம் வைத்திருக்கிறாய். நாங்கள் அதைச் சோதிக்கவேண்டும். போ, போய்க் கதவைத்திற" என்று மிரட்டினான் ஒருவன். அறைத்திறப்பை நான் ஏற்கனவே உனக்குத் தந்துவிட்டேன். சந்தேகம் இருந்தால் நீயே போய்ப் பார். நான் உள்ளே வரமாட்டேன். என்று அம்மா தன் முடிவில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் எனக்கு 5 வயது தான் ஆகியிருந்தது. அப்போது அம்மாவின் பிடிவாதத்திற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. ஏன் அம்மா துப்பாக்கிமுனையிலும் கூட வீட்டுக்குள் போகமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்று என்னால் ஊகிக்கமுடியவில்லை. அம்மாவின் பிடிவாதம் அந்த மிருகங்களின் திட்டத்திற்கு தடையாக இருப்பது அவர்களின் எரிச்சலில் இருந்து புரிந்தது. ஒருவன் துப்பாக்கியை தூக்கி அம்மாவின் நெற்றிப் பொட்டின் மீது வைத்தான். உள்ளே போ, போகாவிட்டால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினான். அம்மா என்னையும் தம்பியையும் அணைத்துக் கொண்டார். சுடுடா, சுடு, சுட்டுக்கொல்லு. என் சகோதரர்களை இலங்கை இராணுவம் கொன்றது. எங்களை நீங்கள் கொல்லுங்கள். குடும்பமாகச் சுட்டுக் கொல்லு. எல்லோரையும் சுடு என்று அம்மா கத்தினார். நானும் தம்பியும் ஓ என்று சத்தமிட்டு அழத்தொடங்கினோம். மடியில் தூங்கிக் கொண்டிருந்த என் தங்கை திடுக்கிட்டு விழித்து அழத்தொடங்கினாள். வீரிட்டு அழத்தொடங்கினாள். அவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோதும் நாங்கள் அழுவதை நிறுத்தவில்லை. எங்கள் அழுகுரல் கேட்டு அயல்வீட்டிலிருக்கும் சொந்தங்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதைக் கண்ட இராணுவம் கொஞ்சம் மிரண்டது. கொல்லையில் அப்பாவை அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்தவர்கள் முற்றத்திற்கு ஓடிவந்தார்கள். பின்னால் அப்பா வலியோடு மெதுவாக நடந்து வந்து எங்களோடு சேர்ந்து கொண்டார். வீதியில் போய்க் கொண்டிருந்த ஊர்மக்கள் வீட்டுப் படலையைத் திறந்து உள்ளே வரத்தொடங்கினார்கள். நிலைமை கட்டுக் கடங்காமல் போவதை உணர்ந்த இராணுவம் மெல்ல வெளியேற முனைந்தது. வீதியால் போய்க் கொண்டிருந்த அந்த சிப்பாய்களின் தலைவன் செய்தி தெரிந்து எங்கள் வீட்டுக்கு வந்தான். சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர் என்பது அவரின் தலைப்பாகையில் இருந்து தெரிந்தது. நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த அவர் அங்கிருந்த இராணுவ மிருகங்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

எனக்கு அழுகை அழுகையாக இருந்தது. அதன் பிறகு வந்த ஒவ்வொரு இரவும் பகலும் அம்மா வீட்டுக்குள் இருப்பதை முடிந்தவரை தவிர்த்தார். ஆண்கள் வேலைக்கு போகும் போது அயல்வீட்டில் இருக்கும் பெண்கள் வயது முதிர்ந்த ஆண்கள் பெண்களோடு கூட்டம் கூட்டமாக இருக்கத்தொடங்கினர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் பெரியப்பா என்னை ஒரு விளையாட்டுப் போட்டிக்குக் கூட்டிப்போனார். அங்கே தலைப்பாகை அணிந்த பல இராணுவத்தினர் இருந்தார்கள். குழந்தைகளுக்காக விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. தலைப்பாகை அணிந்த ஒருவர் வந்து பெரியப்பாவோடு ஆங்கிலத்தில் பேசினார். எனக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. பெரியப்பாவோடு பேசிக் கொண்டிருந்த அவர் என்னைப் பார்த்து " பாப்பா, உன் பேரு என்ன? " என்று கேட்டார். நான் பெயரைச் சொன்னதும். " பாப்பா, என்ன படிக்குது? மிட்டாய் சாப்பிடுறியா? " என்று மிட்டாய்களை எனக்குக் கொடுத்தார். நான் அவரை மிரட்சியோடு பார்த்தேன். பின்னர் பெரியப்பாவின் முகத்தைப் பார்த்தேன். " அவருக்கு நன்றி சொல்லு. மிட்டாயை வாங்கு " என்றார் பெரியப்பா. நான் மிட்டாயை வாங்கினேன். அவருக்கு நன்றி சொன்னேன். பின்னர் நாங்கள் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டோம். மிதிவண்டியில் வரும் போது பெரியப்பாவைப் பார்த்து கேட்டேன் " பெரியப்பா, மிட்டாய் என்றால் என்ன?". பெரியப்பா சொன்னார் " இந்தியாவில் இனிப்பை மிட்டாய் என்று தான் சொல்லுவினம். சாப்பிட்டுப்பார். எப்பிடி இருக்கு?". "இனிக்குது" என்றேன் நான்." பெரியப்பா, அந்த தாடி வைச்ச மாமா யார்? ஏன் அவருக்கு தமிழ் தெரியவில்லை? " என்று கேட்டேன். பெரியப்பா சொன்னார் " அவர் இந்திய இராணுவத் தளபதி. அவர் தான் இந்த இடத்திற்குப் பொறுப்பாளர். சிங்கள இராணுவம் உன்னுடைய மாமாக்களைச் சுட்டுக் கொன்று விட்டது தானே. இனிமேல் வேறு யாரையும் அப்பிடி சுடமாட்டினம். அப்படி சுடவந்தால் இந்த மாமா விடமாட்டார். அவர் எங்களைக் காப்பாத்துவார் " என்றார் பெரியப்பா." ஓ இவர் அப்ப நல்ல மாமாவா? சரி" என்றேன் நான்.

இந்த சம்பவம் நடந்த பிறகு ஒருநாள் பெரியப்பா வீட்டுக்கு வந்திருந்தார். அம்மா கலங்கிய விழிகளோடு நடந்த சம்பவத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் ஓடி வந்து பெரியப்பாவின் மடியில் உட்கார்ந்தேன். " பெரியப்பா, அந்த தாடி வைச்ச மாமா எங்கட வீட்டுக்கு வந்தவர். அவர் நல்ல மாமாவா பெரியப்பா? "என்று கேட்டேன் நான். பெரியப்பா எந்தப் பதிலும் சொல்லவில்லை." பெரியப்பா, எனக்கு மிட்டாய் பிடிக்கவில்லை " என்றேன் நான். அவர் விரக்தியாக எங்கேயோ பார்த்தார்.

சித்திரையில் சில பொழுதுகளும்(Sometimes in April) ஆணிவேரும்

றுவாண்டா நாட்டிலே 1994 காலப்பகுதியில் நடந்தேறிய ருற்சி இனத்தவருக்கு எதிரான குற்று இனத்தவரின் இனவெறியாட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கும் திரைஓவியம் தான் Sometimes in April. சிறுபான்மை இன ருற்சி இனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் இராணுவ வீரனின் வாழ்க்கைப் போராட்டமும் சந்தித்த இழப்புகளும் இதன் கதைக்களம். சரியான ஓர் ஆவணப்படத்திற்கு இருக்கவேண்டிய வரலாற்றுப் பெட்டகங்களையும் உள்ளடக்கிய படியே கதை நகர்கிறது. வேறுபாடுகளற்று ஒன்றுபட்டு வாழ்ந்த இரண்டு இனத்தவரிடையேயும் வேறுபாட்டை விதைத்த வரலாற்றுப் பின்னணியைத் தொடக்கத்தில் சொல்ல கதையாசிரியர் தவறவில்லை. இலங்கையைப் போலவே காலானாதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கிடந்து பின்னர் விடுதலை பெறும் காலப்பகுதியில் பெரும்பான்மை இனத்தவரின் கையில் அதிகாரம் வழங்கப்பட்டதும், அதனை எதிர்த்து சிறுபான்மை இனத்தவர் போராட்டத்தில் குதித்ததுமே இந்த இனப்படுகொலையின் பின்னணியாகக் கூறப்படுகிறது.

1994இல் ஒருநாள் றுவாண்டா அரசதலைவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானம் இனந்தெரியோதோரால் சுடப்பட்ட பின்னரே இந்த வன்முறைகள் வெடித்தன என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஏற்கனவே ஒரு பாரிய இனப்படுகொலைக்கு அரசும் அதன் இராணுவமும் ஆயத்தமாகி விட்டதைக் கத்தி போன்ற ஆயுதங்களைப் பெரும்பான்மை இனத்தொழிலாளர்களுக்கு வழங்கியும் கொலைக்கான பயிற்சியை இராணுவம் வழங்கியதையும் வைத்துக் கூறலாம். அது போலவே இலங்கை வடகிழக்கின் தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டமுறையில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர் கையில் ஆயுதங்களை இலங்கை அரசு வழங்கியது. நாட்டில் அசாதாரண நிலை தோன்றத்தொடங்கிய காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி விடலாம் ருற்சி இனத்தைச் சேர்ந்த மனைவி சொல்லும் போது, "இது என் தாய் நாடு. ஏன் நாம் இங்கிருந்து ஓடவேண்டும் " என்று கணவன் சொல்ல, "ஒவ்வொரு நாளும் அஞ்சி அஞ்சி உயிருக்குக்குப் பயந்தபடி வாழும் இந்த நாட்டை எப்படி என் தாய்நாடு என்று சொல்வது? " என்று மனைவி கேட்பது நியாயமாகத்தான் படுகிறது. சிறுபான்மை றுற்சி இனத்தவரைக் கரப்பான்பூச்சிகள் என்று சொல்லும் இனவாதவானொலியும் இலங்கையில் ஈழத்தமிழரை வந்தேறுகுடிகள் என்று சொல்லும் பெரும்பான்மை இனவாத ஊடகங்களும் ஒன்றை ஒன்று ஒத்த போக்கையே கொண்டிருக்கின்றன.

றுற்சி பெண்ணுக்கும் குற்று ஆணுக்கும் பிறந்த குழந்தைகள் "அப்பா, நாங்கள் றுற்சியா குற்றுவா?" என்று கேள்வி எழுப்புவது நெஞ்சைக் கனக்கவைக்கிறது. தோற்றத்தில் வேறுபாடின்றி ஒத்திருக்கும் இரண்டு இனத்தவரை அடையாள அட்டையைக் கொண்டு மட்டுமே வேறுபடுத்திப் பார்த்துக் கொலை வெறி நாடகம் அரங்கேறுகிறது. பெண்கள் குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல் 100 நாட்களில் 1 மில்லியன் றுற்சி இனமக்கள் குற்று இனவாத அரசாலும் மக்களாலும் தேடித்தேடிக் கொலை செய்யப்படுகிறார்கள். அகதிகளாகத் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களில் றுற்சி இனத்தவரைக் கிராமசேவகரின் உதவியுடன் அடையாளங் கண்டு அழித்தொழிக்கின்றது இராணுவ இயந்திரம். பார ஊர்திகளில் இறந்தவர்களின் உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படும் போது மனிதம் இன்னமும் வாழுகிறதா என்று கேள்வி எழுப்பத்தோன்றுகிறது.

ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் றுவாண்டா இராணுவத்தளபதியைத் தொடர்பு கொண்டு இனப்படுகொலை பற்றிக் கேள்வி எழுப்பிய போது "போராளிகள் எங்களைத் தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம்." என்று படுகொலைகளை மூடிமறைப்பது, இலங்கையில் "பயங்கரவாதிகளைக் கொல்கிறோம்" என்று கூறிக்கொண்டு அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் போக்குக்கு ஒப்பானதாக உள்ளது.

றுவாண்டா நாட்டில் தங்கியிருந்து கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களை ஐ.நா. படைகள் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் போது தங்களையும் அந்த வண்டிகளில் ஏற்றிச் சென்று காப்பாற்றுமாறு றுற்சி இன மாணவர்கள் கதறுகிறார்கள். சிலர் அந்த வண்டிகளில் பாய்ந்து ஏறி அடைக்கலம் தேடமுயல்கிறார்கள். ஐ.நா. படைகள் வான் நோக்கித் துப்பாக்கி சூடு நடாத்தி அந்த மாணவர்களை வண்டிகளை நெருங்க விடாமல் அச்சுறுத்துகிறார்கள். வெள்ளை இன மாணவர்கள் தப்பினால் போதும் என்ற ஐ.நா.வின் தன்னலப்போக்கு அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர்களின் கண் முன்னால் றுற்சி இனமக்கள் கொல்லப்படும் போது அவர்கள் அமைதியாகக் கண்டும் காணமல் போவது வேதனையைத் தருகிறது. எதிரியின் துப்பாக்கியை விட நண்பர்களின் மௌனமே தங்களை வாட்டியது என்று கதையாசிரியர் சொல்வது கண்கூடு.

பிரெஞ்சுப் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளிடம் வந்து றுற்சி இனத்தவரைத் தேடியலையும் இராணுவத்திடம் நாங்கள் எல்லோருமே ஒரே மக்கள் என்று துணிச்சலாகக் கூறும் மாணவி துப்பாக்கி முனையால் தாக்கப்படுகிறாள். "இந்தக் பெண்களை உன் குழந்தைகளாக நினைத்துக் கொள். அவர்களை ஒன்றும் செய்யாதே" என்று கெஞ்சும் ஆசிரியை இராணுவத்தால் தாக்கப்படுகிறாள். "என் மகள் கரப்பான்பூச்சி அல்ல" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த அத்தனை மாணவிகளையும் இனவேறுபாடின்றிச் சுட்டுத்தள்ளுகிறது இராணுவம்.

திரைப்படம் முடிந்த பின்னரும் நெஞ்சை விட்டு அகலாமல் அந்தக் கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றன. இறந்து போன ஒவ்வொரு உயிருக்குமான கண்ணீரைத் தேக்கி இதயம் கனப்பதை மறுக்க முடியவில்லை. எங்கோ ஓர் ஆபிரிக்க கண்டத்தில் நடந்தேறிய இந்த இனப்படுகொலைகளுக்காக ஓர் அமெரிக்கனோ ஆசியனோ கண்ணீர் வடிக்கின்றான் என்றால் அது அந்த திரைப்படத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி எனலாம். இது போன்ற எத்தனையோ மனிதப் படுகொலைகள் ஈழமண்ணில் அரங்கேறியும் அது உலகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதற்கு ஈழத்திரைப்படத்துறையின் நலிந்த போக்கே காரணம். அண்மையில் தாயகத்திலிருந்து வெளிவந்த ஆணிவேர் திரைப்படம் ஈழத்தமிழரின் துயர் சொல்லும் திரைப்படத்துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல. ஆனால் சொல்வந்த கருத்து திரைப்படத்தில் முழுமையாக ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் அது சிறிய ஏமாற்றமே. ஈழத்தமிழர் தவிர்ந்த வேறு எந்த இனமக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வீச்சையுடையதாக அந்தத் திரைப்படம் அமையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. போராட்டத்திற்கான வலுவான காரணியும் இனக்கலவரத்திற்கான பின்னணியும் ஆணிவேரில் மேலோட்டமாகவேனும் அலசப்பட்டிருக்கவில்லை. 1983இல் கொழும்பில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை குறித்த ஒரு திரைப்படமாவது இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. சியாம் செல்வதுரை எழுதிய Funny Boy என்ற புத்தகத்தில் இனக்கலவரம் குறித்த நேரடி அனுபவம் ஆங்கில் மொழியில் பதியப்பட்டிருந்தது. ஆனால் புத்தகம் ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை திரைப்படங்களுக்கு உண்டு.

ஆணிவேர் திரைப்படத்தின் திரைக்கதை குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. குடும்ப அட்டை இருக்கும் வன்னிப்பகுதியில் வாழும் ஒரு மருத்துவர் இறந்து போவதாகச் சொல்லப்படுவதும் இறுதிக்காட்சியில் அவர் உயிரோடு வருவதும் நம்பமுடியாத ஒன்று. அதுவரை அவர் எங்கிருந்தார் என்று குறிப்பாகச் சொல்லப்படவில்லை. காட்சிகள் கோர்வையாக இல்லாததும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றதாக இருப்பது கதையின் உயிரோட்டத்திற்கு வலுச் சேர்க்கவில்லை. பத்திரிகை நிருபராக வரும் மதுமிதா இராணுவக்கட்டுப்பாடு நிறைந்த யாழ்ப்பாணத்திற்குச் செல்வதும் அதன் பின்னர் யாழ்ப்பாண இடப்பெயர்வைக் காட்டுவதும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. வன்னியில் தயாரிக்கப் பட்ட உயிர்பூ, செவ்வரத்தம்பூ போன்ற குறும்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட ஆணிவேர் ஏற்படுத்தவில்லை. காட்சியமைப்பும் காட்சிகளின் தரமும் நடிகர்களின் நடிப்பும் நன்றாக இருந்தும் திரைக்கதையின் வலு படத்தின் உயிரோட்டத்திற்குப் போதுமானதாக இருக்கவில்லை.

இந்தக் குறைகளை எல்லாம் களையப்பட்டு, Sometimes in April படத்தில் றுவாண்டா றுற்சி இனமக்களின் அவலம் சொல்லப்பட்டது போல ஈழத்தமிழர் துயர் சொல்லும் ஒரு திரைப்படமாவது வெளிவரவேண்டும். றுற்சி இனப்படுகொலைகள் நடந்தது சித்திரையில். ஈழத்தமிழர் படுகொலை நடந்தேறியது மேமாதத்தில். றுற்சி மக்களுக்கு Sometimes in April என்றால் ஈழத்தமிழருக்கு Sometimes in May. எங்களுக்கான ஒரு திரைப்படம் உலகளவில் வெளிவருமா?

Monday, April 27, 2009

நாடகம்

நாடகம்: உண்ணாவிரதம்
கதை, வசனம், இயக்கம், நடிப்பு: கலைஞர் மு. கருணாநிதி
துணை நடிகர்கள்: ஸ்டாலின், அழகிரி, தங்கபாலு
காலம்: 2-4 நாட்கள்.
இடம்: சென்னை, அண்ணாசிலை


ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி கலைஞர் திடீர் காலவரையற்ற உண்ணாவிரத்தைத் தொடங்கியுள்ளார். ராஜபக்சே தமிழர்களைக் கொன்றது போல் என்னையும் கொல்லட்டும் என்று அவர் கூறியுள்ளார். அரசியல்வாதி என்பதைத் தாண்டி கலைஞர் மீதும் அவரின் தமிழ்ப் புலமை மீதும் தமிழினப் பற்றுமீதும் ஈழத்தமிழர்களுக்குத் தீராத காதல் உண்டு. கடந்த காலங்களில் அவர் பலதடவை சூழ்நிலைக் கைதியாக மாறி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த போதெல்லாம் ஈழத்தமிழர்கள் அவர் மீது வெறுப்புக் கொண்டதில்லை. பதிலாக, கருணாநிதியிடம் கருணை இருக்கிறது, பாவம் உதவுவதற்கு நிதிதான் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக கலைஞர் செய்யும் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு அவர் மீது அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழினத்தலைவர் என்று உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட்ட அவர் தன் வயதிற்கு தரம் தாழ்ந்து நடத்தும் நாடகங்களும் கோமாளித்தனமான பேச்சுக்களும் கவிதைகளும் அவர் மீது மக்களுக்கு வெறுப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் கடுகளவும் ஐயம் இல்லை. இந்த நாடகத்தின் உச்சக்கட்டமாக இன்று அவர் அரங்கேற்றியுள்ள உண்ணாவிரதக் கூத்து ஈழத்தமிழரின் பிணத்தின் மேல் அவர் அரங்கேற்றும் அரசியல் வியாபாரம். இந்த சூழ்நிலையில் கலைஞரைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நண்பர்களே ஒன்றைச் சிந்தியுங்கள். கலைஞரின் இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம் என்ன? உண்மையிலேயே அவர் ஈழத்தமிழர்களுக்காக மனம் வருந்துகின்றார் என்றால் போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் பெண்கள் நடத்திய உண்ணாவிரத்தத்தை ஏன் அலட்சியம் செய்தார்? 6 பெண்களின் உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போன பொழுது அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தாரே எதற்காக? இத்தனை மாதங்களாக கண்முன்னே 16 மைல்கல் தொலைவில் ஈழத்தமிழர் மடியக்கண்டும் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருந்தவர் திடீரென்று உண்ணாநிலை இருக்க என்ன காரணம்?

நேற்றைய தினம் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த அறிவித்தல் விடுத்தும் இலங்கை அரசு அதனைப் புறக்கணித்ததோடு மட்டுமன்றி, இலங்கை அரச தலைவரின் தம்பி கொத்தபாய ராஜபக்சே இன்னும் 2 நாட்களுக்குள் போரை முடித்துவிடுவோம் என்று பிபிசிக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். அத்தோடு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்னும் 15 000 மக்கள் மட்டுமே உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். மாறாக, அங்கு 165 000 பேர் வாழ்வதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கூறியுள்ளார். ஆனால் கொத்தபாய ராஜபக்சே லண்டன் பிபிசிக்கு தெரிவிக்கையில் அங்கு 15 000 மக்கள் மட்டுமே உள்ளார்கள் என்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறியுள்ளார். இந்த கூற்றுக்குப் பின்னால் இருக்கும் பயங்கரத்தை நாங்கள் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட, 150 000 மக்களை ஆதாரமின்றி கொல்வதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துவிட்டது. இன்றோ நாளையோ சத்தமின்றி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எங்கள் சொந்தங்கள் கொன்று குவிக்கப்படப் போகின்றார்கள். இலங்கை அரசின் இந்தச் சதித்திட்டம் உலகத்திற்குத் தெரிந்தும் அது பாரமுகமாக இருக்கின்றது. ஆனால் இந்த திட்டமிட்ட படுகொலைகள் உலகத்தின் கண்ணில் இருந்து மறைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் கண்ணில் இருந்து மறைப்படமுடியாத ஒன்று. இனி வரும் தேர்தலில் இது எதிரொலிக்கப்படலாம் என்ற அச்சம் கலைஞருக்கு உண்டு. அதனால் தான் இதற்கு தான் பொறுப்பாளி அல்ல என்று காட்டுவதற்காகவும் தன் மீது அனுதாப அலை வீசவேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடபநாடகத்தை கலைஞர் அரங்கேற்றியுள்ளார்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்வார்களே அது இது தான். இந்தப் பக்கம் நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். அந்தப் பக்கம் நீங்கள் ஆயுதம் கொடுத்து ஆளுதவி கொடுத்து தமிழர்களைக் கொல்லுங்கள். கலைஞரின் ஆதரவின்றி மத்தியில் நடுவண் காங்கிரசு அரசு நீடிக்கமுடியாது. அப்படி இருக்கும் போது எதற்காக இவர் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? ராஜபக்சே என்னைக் கொல்லட்டும் என்கின்றாரே, ராஜபக்சே இவரை ஏன் கொல்லவேண்டும். கருணாநிதியை தமது நண்பர் என்கிறது சிங்கள அரசு. தமது நண்பரை எதற்காக அவர்கள் கொல்லவேண்டும். யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

புலம்பெயர் தேசத்திலே எங்கள் உறவுகளுக்காய் நாங்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றோம். போரை நிறுத்துங்கள் என்று ஒவ்வொரு நாட்டுத்தூதரகத்திற்கு முன்னாலும் மண்டியிட்டு அழுகின்றோம். உண்ணவும் முடியாமல் உறங்கவும் முடியாமல் சித்தப் பிரமை பிடித்தவர்களாய் எங்கள் இனம் மாறிக் கொண்டிருக்கின்றது. இத்தனை இடர்பாடுகளுக்கு நடுவிலும் உலகம் எங்களைக் கைவிடாது என்று மெல்லிய நம்பிக்கைக் கீற்றைப் பற்றிப்பிடித்தபடி தங்கள் உயிரைக்கூடத் துறக்கத்துணிந்து பிரித்தானியாவிலும் நோர்வேயிலும் கனடாவிலும் இளைஞர்கள் உண்ணாநோன்பிருந்து உலகத்தின் கவனத்தை எம்மீது திரும்பவைக்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். மாற்றுக் கொள்கை கொண்ட நண்பர்களும் தங்கள் மனத்தை மாற்றிக் கொண்டு ஒரு குடையின் கீழ்திரண்டு அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர் தங்கள் சொந்தமண்ணின் சோகமறிந்து போராடும் போதும் கலைஞருக்கு ஏன் இந்தக் கபட நாடகம்? எங்கள் போராட்டத்தை முடிந்த வரை கொச்சைப்படுத்துவது தான் அவரின் குறிக்கோளா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்று சொல்வார்கள். ஐயா, கலைஞரே எங்களை விட்டு விடுங்கள். உங்கள் சொந்த மக்களை, மீனவர்களை இந்தியக் கடற்படையே தாக்கியிருக்கின்றதே இதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?

பொறுத்திருந்து பாருங்கள் இந்த கபடநாடகம் எப்படி அரங்கேறுகின்றது என்பதை. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றாரே என்று கலங்காதீர்கள். இது அவருக்கொன்றும் புதிதல்ல. ஏற்கனவே அவர் பலதடவைகள் எங்களுக்காக உயிர் விட்டுள்ளார்.இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து உயிர்விட்டார். ஈழத்தமிழர்களுக்காக பலதடவைகள் உயிர் விட்டார். இப்போதும் கூட அப்படியே உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்ய முன்வந்துள்ளார்.இந்த நாடகம் 4 நாட்களுக்கு நீடிக்கும். நாளையே மத்தியிலிருந்து காங்கிரசின் சார்பில் பிரணாப் முகர்ஜியோ நாராயணனோ வருவார்கள். கலைஞரோடு பேசுவார்கள். மறுநாள் கலைஞர் ஊடகவியலாளர்களைச் சந்திப்பார். சந்தித்து மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன என்று கூறி பழச்சாற்றைக் குடித்து உண்ணாவிரத்தை முடித்துக் கொள்வார். தமிழ்நாடே கலைஞரின் கதை வசனத்தில் உருவான இந்த நாடகத்தை வேடிக்கை பார்க்க, மறுபுறம் காங்கிரசு-ராஜபக்சே கூட்டணி வன்னியில் 150 000 மக்களைச் சத்தமில்லாமல் கொன்று குவித்திருக்கும். பார்வையாளர்களாய் கலைஞருக்குத் துதி பாடிக்கொண்டு புலம்பெயர் தேசத்தில் நாம் இருப்போம்.

Friday, April 03, 2009

என்ன செய்யப் போகிறோம்?

நாற்புறமும் பகைவர் கூட்டம்
நடுவிலே நம் தமிழ்த்தாய்
காப்பதற்கு தமிழெரெல்லாம்
வாருங்கள்

என்ற பாரதிதாசனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.க என்று தமிழகமே ஒன்றாய் இரண்டாய் பலவாய் கூறுபட்டுக் கிடக்கின்றது. அங்கே ஈழத்திலே எங்கள் சொந்தங்களெல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கின்றது. தொப்புள் கொடி உறவிது என்று கவிபாடும் கவிஞர், கலைஞர் இன்று கண்மூடி மௌனியாய்க் கிடக்கின்றார். இன்றைய ஈழ அவலத்தின் பின்னால் இந்தியாவின் இரும்புக்கரம் தான் உள்ளது என்பது வெள்ளிடைமலை. அதனை யாராலும் மறுதலிக்கமுடியாது. ஆயுத உதவி என்பதைத் தாண்டி இன்று ஆளுதவியோடு இந்திய இராணுவம் தன் அசுரக்கரங்களால் ஈழமண்ணை நசுக்கிக் கொண்டிருக்கின்றது. அங்கே செத்து விழுபவர்களெல்லாம் உங்கள் சொந்தங்கள். கருவில் இருக்கும் குழந்தை முதல் கல்லறை செல்லும் முதியவர் வரை அத்தனைபேரையும் இராணுவ இயந்திரம் கொத்துக் குண்டுகளால் குத்திக் குதறுகின்றது. 16 மைல் கல் தொலைவில் இருக்கும் தமிழகம் தங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கை தகர்ந்து போன நிலையில் உலகமே கைவிட்ட நிலையில் கதறிக் கொண்டிருக்கும் ஈழமக்களுக்கு நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்? தி.மு.க ஆதரவு எதிர்ப்பு என்ற வாதங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்றைய அவலத்தை எப்படித் தடுத்து நிறுத்தப்போகிறோம் என்று சிந்தியுங்கள். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே ஒன்று தான். ஒன்று எதிரி, மற்றது துரோகி. இந்தி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மொழிப்பற்று, பகுத்தறிவுக் கொள்கை எனப்பலவிடயங்களால் கொள்கையளவில் தி.மு.கவின் மீதும் அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மீதும் உங்களுக்கு அளவு கடந்த பாசம், அன்பு இருக்கக் கூடும். ஆனால் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒன்றைக் கலைஞர் கடைப்பிடிக்கின்றாரா என்றால் அது கேள்விக்குறிதான். அன்று கண்ணகிக்கு கவிபாடிய கலைஞர் இன்று சோனியாவுக்கு துதிபாடுகின்றார். அவரின் துணைவியாரோ கோவில் கோவிலாக யாகம் வளர்க்கின்றார். அன்று தேன்மொழி, கனிமொழி என்று மொழிப்பற்றோடு பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டியவர் இன்று ஈழத்தமிழர் விடயத்தில் மௌனமொழி பேசுகின்றார். இன்று ஈழத்தமிழர் சிந்தும் இரத்தத்தில் கலைஞருக்குப் பெரிய பங்கு இருக்கின்றது. ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் காங்கிரசு தோற்கடிக்கப்படவேண்டும். அவர்களின் துயர் துடைக்கப்படவேண்டும். காங்கிரசு தோற்கவேண்டுமென்றால் அதனோடு கூட்டணி வைத்திருக்கும் தி.மு.க தோற்கடிக்கப்படவேண்டும். அவருடைய மொழியில் சொல்வதென்றால் தி.மு.க தோற்கடிக்கப்படவேண்டும் என்கிறேன். அது தி.மு.க கூடாது என்பதற்காக அல்ல. அது தீய காங்கிரசின் கூடாரமாகி விட்டது என்பதற்காக.

நெஞ்சிற் துணிவுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி

தன் சொற்திறமையால் தன் துரோகத்தை கலைஞர் நியாயப்படுத்துவார். நாளைக்கு ஈழப்போர் வரலாற்றை அவர் கவிதையாக வடிப்பார். கலிங்கத்து பரணி பாடிய அவர் நாளையே ஈழத்துப்பரணி பாடக்கூடும். அன்று அவரின் மந்திரப்பேச்சில் நாம் மயங்கியது உண்மை தான். ஆனால் அதுவே வஞ்சனைப் பேச்சானால்....? எப்போது தன் குடும்பத்தை முன்னிறுத்தித் தன் கொள்கைகளைக் கைவிட்டாரோ அப்போதே கலைஞர் தமிழினத்தலைவர் என்ற தகுதியை இழந்து விட்டார். ஒன்றுமட்டும், உறுதியாகச் சொல்கிறேன். ஈழ வரலாற்றில் கலைஞரின் பெயர் நிச்சயம் பொறிக்கப்பட்டிருக்கும். கல்வெட்டுகளில் அல்ல கல்லறைகளில். நெஞ்சிலே குத்துபவனை எதிர்கொள்ளலாம். அதுவே, முதுகிலே குத்துபவன் என்றால்......?

சொந்தச் சகோதரன் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை கலங்காரடி இவர் செய்வதறியாரடி...

Tuesday, May 01, 2007

சித்திரையில் சில பொழுதுகளும் (Sometimes in April) ஆணிவேரும்

றுவாண்டா நாட்டிலே 1994 காலப்பகுதியில் நடந்தேறிய ருற்சி இனத்தவருக்கு எதிரான குற்று இனத்தவரின் இனவெறியாட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கும் திரைஓவியம் தான் Sometimes in April. சிறுபான்மை இன ருற்சி இனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் இராணுவ வீரனின் வாழ்க்கைப் போராட்டமும் சந்தித்த இழப்புகளும் இதன் கதைக்களம். சரியான ஓர் ஆவணப்படத்திற்கு இருக்கவேண்டிய வரலாற்றுப் பெட்டகங்களையும் உள்ளடக்கிய படியே கதை நகர்கிறது. வேறுபாடுகளற்று ஒன்றுபட்டு வாழ்ந்த இரண்டு இனத்தவரிடையேயும் வேறுபாட்டை விதைத்த வரலாற்றுப் பின்னணியைத் தொடக்கத்தில் சொல்ல கதையாசிரியர் தவறவில்லை. இலங்கையைப் போலவே காலானாதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கிடந்து பின்னர் விடுதலை பெறும் காலப்பகுதியில் பெரும்பான்மை இனத்தவரின் கையில் அதிகாரம் வழங்கப்பட்டதும், அதனை எதிர்த்து சிறுபான்மை இனத்தவர் போராட்டத்தில் குதித்ததுமே இந்த இனப்படுகொலையின் பின்னணியாகக் கூறப்படுகிறது.

1994இல் ஒருநாள் றுவாண்டா அரசதலைவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானம் இனந்தெரியோதோரால் சுடப்பட்ட பின்னரே இந்த வன்முறைகள் வெடித்தன என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஏற்கனவே ஒரு பாரிய இனப்படுகொலைக்கு அரசும் அதன் இராணுவமும் ஆயத்தமாகி விட்டதைக் கத்தி போன்ற ஆயுதங்களைப் பெரும்பான்மை இனத்தொழிலாளர்களுக்கு வழங்கியும் கொலைக்கான பயிற்சியை இராணுவம் வழங்கியதையும் வைத்துக் கூறலாம். அது போலவே இலங்கை வடகிழக்கின் தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டமுறையில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர் கையில் ஆயுதங்களை இலங்கை அரசு வழங்கியது. நாட்டில் அசாதாரண நிலை தோன்றத்தொடங்கிய காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி விடலாம் ருற்சி இனத்தைச் சேர்ந்த மனைவி சொல்லும் போது, "இது என் தாய் நாடு. ஏன் நாம் இங்கிருந்து ஓடவேண்டும் " என்று கணவன் சொல்ல, "ஒவ்வொரு நாளும் அஞ்சி அஞ்சி உயிருக்குக்குப் பயந்தபடி வாழும் இந்த நாட்டை எப்படி என் தாய்நாடு என்று சொல்வது? " என்று மனைவி கேட்பது நியாயமாகத்தான் படுகிறது. சிறுபான்மை றுற்சி இனத்தவரைக் கரப்பான்பூச்சிகள் என்று சொல்லும் இனவாதவானொலியும் இலங்கையில் ஈழத்தமிழரை வந்தேறுகுடிகள் என்று சொல்லும் பெரும்பான்மை இனவாத ஊடகங்களும் ஒன்றை ஒன்று ஒத்த போக்கையே கொண்டிருக்கின்றன.

றுற்சி பெண்ணுக்கும் குற்று ஆணுக்கும் பிறந்த குழந்தைகள் "அப்பா, நாங்கள் றுற்சியா குற்றுவா?" என்று கேள்வி எழுப்புவது நெஞ்சைக் கனக்கவைக்கிறது. தோற்றத்தில் வேறுபாடின்றி ஒத்திருக்கும் இரண்டு இனத்தவரை அடையாள அட்டையைக் கொண்டு மட்டுமே வேறுபடுத்திப் பார்த்துக் கொலை வெறி நாடகம் அரங்கேறுகிறது. பெண்கள் குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல் 100 நாட்களில் 1 மில்லியன் றுற்சி இனமக்கள் குற்று இனவாத அரசாலும் மக்களாலும் தேடித்தேடிக் கொலை செய்யப்படுகிறார்கள். அகதிகளாகத் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களில் றுற்சி இனத்தவரைக் கிராமசேவகரின் உதவியுடன் அடையாளங் கண்டு அழித்தொழிக்கின்றது இராணுவ இயந்திரம். பார ஊர்திகளில் இறந்தவர்களின் உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படும் போது மனிதம் இன்னமும் வாழுகிறதா என்று கேள்வி எழுப்பத்தோன்றுகிறது.

ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் றுவாண்டா இராணுவத்தளபதியைத் தொடர்பு கொண்டு இனப்படுகொலை பற்றிக் கேள்வி எழுப்பிய போது "போராளிகள் எங்களைத் தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம்." என்று படுகொலைகளை மூடிமறைப்பது, இலங்கையில் "பயங்கரவாதிகளைக் கொல்கிறோம்" என்று கூறிக்கொண்டு அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் போக்குக்கு ஒப்பானதாக உள்ளது.

றுவாண்டா நாட்டில் தங்கியிருந்து கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களை ஐ.நா. படைகள் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் போது தங்களையும் அந்த வண்டிகளில் ஏற்றிச் சென்று காப்பாற்றுமாறு றுற்சி இன மாணவர்கள் கதறுகிறார்கள். சிலர் அந்த வண்டிகளில் பாய்ந்து ஏறி அடைக்கலம் தேடமுயல்கிறார்கள். ஐ.நா. படைகள் வான் நோக்கித் துப்பாக்கி சூடு நடாத்தி அந்த மாணவர்களை வண்டிகளை நெருங்க விடாமல் அச்சுறுத்துகிறார்கள். வெள்ளை இன மாணவர்கள் தப்பினால் போதும் என்ற ஐ.நா.வின் தன்னலப்போக்கு அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர்களின் கண் முன்னால் றுற்சி இனமக்கள் கொல்லப்படும் போது அவர்கள் அமைதியாகக் கண்டும் காணமல் போவது வேதனையைத் தருகிறது. எதிரியின் துப்பாக்கியை விட நண்பர்களின் மௌனமே தங்களை வாட்டியது என்று கதையாசிரியர் சொல்வது கண்கூடு.

பிரெஞ்சுப் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளிடம் வந்து றுற்சி இனத்தவரைத் தேடியலையும் இராணுவத்திடம் நாங்கள் எல்லோருமே ஒரே மக்கள் என்று துணிச்சலாகக் கூறும் மாணவி துப்பாக்கி முனையால் தாக்கப்படுகிறாள். "இந்தக் பெண்களை உன் குழந்தைகளாக நினைத்துக் கொள். அவர்களை ஒன்றும் செய்யாதே" என்று கெஞ்சும் ஆசிரியை இராணுவத்தால் தாக்கப்படுகிறாள். "என் மகள் கரப்பான்பூச்சி அல்ல" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த அத்தனை மாணவிகளையும் இனவேறுபாடின்றிச் சுட்டுத்தள்ளுகிறது இராணுவம்.

திரைப்படம் முடிந்த பின்னரும் நெஞ்சை விட்டு அகலாமல் அந்தக் கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றன. இறந்து போன ஒவ்வொரு உயிருக்குமான கண்ணீரைத் தேக்கி இதயம் கனப்பதை மறுக்க முடியவில்லை. எங்கோ ஓர் ஆபிரிக்க கண்டத்தில் நடந்தேறிய இந்த இனப்படுகொலைகளுக்காக ஓர் அமெரிக்கனோ ஆசியனோ கண்ணீர் வடிக்கின்றான் என்றால் அது அந்த திரைப்படத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி எனலாம். இது போன்ற எத்தனையோ மனிதப் படுகொலைகள் ஈழமண்ணில் அரங்கேறியும் அது உலகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதற்கு ஈழத்திரைப்படத்துறையின் நலிந்த போக்கே காரணம். அண்மையில் தாயகத்திலிருந்து வெளிவந்த ஆணிவேர் திரைப்படம் ஈழத்தமிழரின் துயர் சொல்லும் திரைப்படத்துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல. ஆனால் சொல்வந்த கருத்து திரைப்படத்தில் முழுமையாக ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் அது சிறிய ஏமாற்றமே. ஈழத்தமிழர் தவிர்ந்த வேறு எந்த இனமக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வீச்சையுடையதாக அந்தத் திரைப்படம் அமையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. போராட்டத்திற்கான வலுவான காரணியும் இனக்கலவரத்திற்கான பின்னணியும் ஆணிவேரில் மேலோட்டமாகவேனும் அலசப்பட்டிருக்கவில்லை. 1983இல் கொழும்பில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை குறித்த ஒரு திரைப்படமாவது இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. சியாம் செல்வதுரை எழுதிய Funny Boy என்ற புத்தகத்தில் இனக்கலவரம் குறித்த நேரடி அனுபவம் ஆங்கில் மொழியில் பதியப்பட்டிருந்தது. ஆனால் புத்தகம் ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை திரைப்படங்களுக்கு உண்டு.

ஆணிவேர் திரைப்படத்தின் திரைக்கதை குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. குடும்ப அட்டை இருக்கும் வன்னிப்பகுதியில் வாழும் ஒரு மருத்துவர் இறந்து போவதாகச் சொல்லப்படுவதும் இறுதிக்காட்சியில் அவர் உயிரோடு வருவதும் நம்பமுடியாத ஒன்று. அதுவரை அவர் எங்கிருந்தார் என்று குறிப்பாகச் சொல்லப்படவில்லை. காட்சிகள் கோர்வையாக இல்லாததும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றதாக இருப்பது கதையின் உயிரோட்டத்திற்கு வலுச் சேர்க்கவில்லை. பத்திரிகை நிருபராக வரும் மதுமிதா இராணுவக்கட்டுப்பாடு நிறைந்த யாழ்ப்பாணத்திற்குச் செல்வதும் அதன் பின்னர் யாழ்ப்பாண இடப்பெயர்வைக் காட்டுவதும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. வன்னியில் தயாரிக்கப் பட்ட உயிர்பூ, செவ்வரத்தம்பூ போன்ற குறும்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட ஆணிவேர் ஏற்படுத்தவில்லை. காட்சியமைப்பும் காட்சிகளின் தரமும் நடிகர்களின் நடிப்பும் நன்றாக இருந்தும் திரைக்கதையின் வலு படத்தின் உயிரோட்டத்திற்குப் போதுமானதாக இருக்கவில்லை.

இந்தக் குறைகளை எல்லாம் களையப்பட்டு, Sometimes in April படத்தில் றுவாண்டா றுற்சி இனமக்களின் அவலம் சொல்லப்பட்டது போல ஈழத்தமிழர் துயர் சொல்லும் ஒரு திரைப்படமாவது வெளிவரவேண்டும். றுற்சி இனப்படுகொலைகள் நடந்தது சித்திரையில். ஈழத்தமிழர் படுகொலை நடந்தேறியது ஆடியில். றுற்சி மக்களுக்கு Sometimes in April என்றால் ஈழத்தமிழருக்கு Sometimes in July. எங்களுக்கான ஒரு திரைப்படம் உலகளவில் வெளிவருமா?

Monday, December 18, 2006

கடற்கோள் காவு கொண்ட என் பள்ளித்தோழியின் நினைவலைகள்.

நாட்குறிப்பேடு தை 16 2005

என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்க்கையின் நிலையாமை குறித்துப் பலர் பலவிதமாகப் பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அதை இந்த இளம்வயதில் உணர்ந்து கொள்ளக் கூடிய நாள் வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் நடந்து வந்த பாதையினைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.எத்தனையோ முள் தடங்கள் எல்லாம் தாண்டி இப்போது வசந்தத்தின் வாசலில் இருப்பதாக நான் நினைத்ததில்லை. முள்ளின் நடுவே மலர்ந்திருக்கும் மலரைப் பார்த்து முட்களை மறந்து போயிருக்கிறேன்.சின்ன சின்ன விடயங்களையெல்லாம் இரசித்து வாழ்க்கையில் சினங்களை மறந்திருக்கிறேன். 1996 ம் ஆண்டு. யாழிலிருந்து இடம் பெயர்ந்து கிட்டத்தட்ட அகதியாய் நான் அந்த உடப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்த நேரம். பள்ளியில சேர்ந்த முதல்நாள் நீ பழக்கமானாய். காரணம்; யாழ்ப்பாணத்தமிழ் பேசத் தெரிந்த ஒருத்தி அங்கு நீயே தான். இடைவேளையின் போது வகுப்பே கூடியிருந்து ஒன்றாகச் சாப்பிடும். ஓவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து சாப்பிடுவார்கள். என்னால் மட்டும் முடியவில்லை. அவர்கள் தரும் உணவை உண்ணக்கூடாது.வீட்டில் போடப் பட்ட சட்டம். .நான் மட்டும் தனித்தீவாய் ஒரு மாதம் ஓடியது. வகுப்புத் தொழிகளுடனேயே பேசக் கூச்சமாக இருக்கும்.காரணம் நான் பேசும் தமிழ்.அந்நியப் பட்ட ஒரு சூழலில் எனக்கு அணைவாக இருந்தவள் அவள் ஒருத்தி தான். எத்தனையோ நினைவுகள்.இப்போது மீட்டிப் பார்க்கக் கண்கள் குழமாகின்றன. எங்கள் வகுப்பு ஓரத்தில் வெட்டையாய் இருந்த அந்த நிலப்பகுதியில் பூஞ்செடி வைப்போம் என்று முன் மொழிந்தேன்.மறுப்பின்றி நீ வழி மொழிந்தாய்.மறுநாளே ஆளுக்காள் ரோசா,செவ்வந்தி,செவ்வரத்தை,கனகாம்பரம்,நித்தியகல்யாணி என்று கொண்டுவர அந்த இடமே பூஞ்சோலையானது. இத்தனையையும் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஆண் மாணவர் கூட்டம் அன்றிரவே நட்டுவைத்த அத்தனை செடிகளையும் பிடுங்கி எறிந்து விட்டு எதோ பெண்களையே உலகத்திலிருந்து பிடுங்கி எறிந்து விட்டதாக இறுமாப்புக் கொண்டனர்.மறுநாள் காலை பள்ளி வந்து நீ இவற்றை எல்லாம் பார்த்து அழுதது இன்னும் என் கண்களில் நிற்கிறது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று ஆத்திரப் பட்ட நாம் அதிபரிடம் புகார் செய்ததும் மறுநாள் அந்த மாணவர்களே மலர்த்தோட்டம் அமைத்தது கண்டு நீ கேலி பேசிச் சிரித்ததும் இப்போது போல் இருக்கிறது. சில நாட்கள் ஓடிய பின் காலையில் பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்ற வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் நட்ட ரோசா பூப்பூத்திருந்தது. என்னையறியாமலே, “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற பாடலைப் பாடியவண்ணம் தண்ணீரை ஊற்றிப் பாத்தி கட்டிக் கொண்டிருந்த நான் ஆளரவம் கேட்டுச் சட்டென்று திரும்பிப் பார்க்க பின்னால் சிறீகாந்தா ஆசிரியர் நமுட்டுச் சிரிப்புடன், “ அம்மணி ரோசாப்பூவை விடப் பாட்டு நல்லா இருக்கு. நீ பாடிப் பாடி தண்ணீர் ஊற்று” என்று கேலியாகச் சொல்லி விட்டு நகர்ந்தார். எனக்கு வெட்கமாகிப் போய் விட்டது. “ அடி! வகுப்பில யாருக்கும் சொல்லாத. சொன்னால் கிண்டல் பண்ணுவாளுக” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே நீ வகுப்பு முழுவதற்கும் பறையடித்து விட்டாய். அன்று முழுவதும் உன்னைத் துரத்திக் கொண்டு நான் வர என்னிடமிருந்து தப்பி நீ ஓடியதும், அதன் பின் என்னைக் காணும் பொழுதெல்லாம், ரோசாப்பூ பாடல் பாடிப் பாடித் தோழிகள் வரவேற்பதும் இப்போது நினைக்கும் போது நேற்றுப் போல் இருக்கிறது..ஓவ்வொரு வெள்ளியும் காலையில் சைவமாணவர்களுக்கு சிவபுராணம் ஓதுதல் நடக்கும். உனக்கு அந்த தொல்லையில்லை. வானத்திலிருந்து வையகம் எழுந்த புனித ஆவியே பாடலுடன் இரண்டு செபங்கள் அவ்வளவு தான்.ஆனால் ஏனோ தெரியவில்லை.நீயும் சிவபுராணம் படிக்க வருவாய் எங்களுடன். தொல்லையிலும் பிறவி என்று பாடத்தொடங்கும் போதே எனக்கு சேக்கிழார் மீது எரிச்சல் வரும். ஆனாலும் அவை மகிழ்ச்சியான நாட்கள். நவராத்திரிக் காலத்திலும் காலையில் எழுந்து மாலைகட்டி(மாலை கட்டுவதில் கூட எமக்குள் எத்தனை போட்டி)பனிக்குளிரில் தலைகுளித்து,அப்பப்பா இப்போது நினைத்தாலும் நாடி நாளமெல்லாம் சில்லென்று விறைத்துப் போய் விடுகின்றது. அதை விட நகைச்சுவை தாவணி போடுவது. ஆளாளுக்கு ஒவ்வொரு நிறத்திலே தாவணி அணிந்து கொண்டு ஏதோ அழகிப் போட்டிக்குப் போவது போல் அணிவகுத்து நிற்போம். அதில் கூட நகைச்சுவையாக சொல்வார்கள் ஆசிரியர்கள், “குட்டிகள் எல்லாம் தாவணி போட்டால்தான் வெட்கப்படுதுகள.இல்லையென்றால் இதுகள் எல்லாம் பிசாசுக்கூட்டம்”; என்று. ஏனோ தெரியவில்லை. பெண்களைக் குட்டிகள் என்று சொல்லும் போது எனக்கு எரிச்சலாய் வரும். “குட்டிகள் என்றால் நாங்கள் என்ன நாய்க்குட்டிகளா? இல்லை ஆட்டுக்குட்டிகளா?பெண்கள் என்று சொல்லுங்கோ சேர்” என்று நான் சொல்வேன். நீ மட்டும் அதற்கும் நகைச்சுவையாகஇ “குட்டிகளுக்கு வெட்கப்படத் தெரியாதே சேர்.அதுகளுக்கெல்லாம் ஐந்தறிவு தான்.குமரிகள் வேணுமானால் வெட்கப்படுவாங்க.நாங்கள் குழந்தைகள்.நாங்கள் எப்படி வெட்கப் படுவது” என்று ஆசிரியருக்கு கிண்டல் அடிக்க “ இவளோட பேசி வெல்லமுடியாது”என்று தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அவர்கள் போவதுகண்டு சிரிப்பாக இருக்கும்.
;நவராத்திரிகாலத்தில் கொலுவுக்கு முன்னால் தேங்காய்ப் பூவினாலும் மாவினாலும் கோலம் போட்டு அழகு படுத்துவோம். இத்தனை செய்தும் அந்த ஆண்மாணவர்கள் எங்களை கடவுளுக்கு மாலை போட விடமாட்டார்கள். “பெண்கள் கட்டிய பூமாலை வேண்டும் ஆனால் பெண்கள் போடக்கூடாது” என்று ஒருத்தி தொடங்க, “அதானே உங்கள் கழுத்திலா போடக் கேட்டோம்.கடவுளுக்குத் தானே போடக் கேட்டோம்” என்று கடிக்க, அத்தனை பெண்களும் கொல்லென்று சிரிக்க பையன்கள் பார்த்து முறைக்க, “ஏண்டா கந்தப்பு முறைக்கிறாய்?” என்று பின்னால் மறைந்திருந்து ஒருத்தி சொல்ல “எவடி அவள் துணிச்சல் இருந்தால் முன்னால் வந்து சொல்” கந்தப்பு தன் வீரத்தைப் பெண்களுக்கு முன் காட்டுவான். “குரைக்கிற நாய் கடிக்காது தானே.” என்று முணுமுணுக்க மீண்டும் ஆண்மாணவர்களுக்கும் பெண்மாணவர்களுக்குமிடையில் அதிகாரப் போட்டி தொடங்கும். ஆனாலும் இத்தனை குறும்புகளுக்கும் கேலிப்பேச்சுகளுக்கும் யாரும் ஆத்திரப் பட்டதோ கோபப்பட்டதோ இல்லை.இத்தனை கேலிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது நீ என்று ஆண்மாணவர்களுக்குத் தெரியும். அதனால் தான் “டயனா” என்கின்ற உன் பெயரை வைத்து எல்லோரும் “இளவரசி வராடா” என்று கிண்டல் செய்வார்கள்.எங்கள் பள்ளிக்காலத்தைக் கலகலப்பாக்கியவள் நீ என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஓருநாள் பள்ளிவிட்டு வீடு திரும்பும் வழியிலுள்ள பொதுக்கிணற்றில் பைத்தியக்கார கிழவி அம்மணமாய் குளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கிழவிக்கு பைத்தியம் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே அதைப் பார்த்துக் கொல் என்று சிரித்து விட்டேன். கிழவிக்கு வந்ததே கோபம், “ எந்த சிறுக்கி அவள் என்னைப் பார்த்துச் சிரித்தவள். பொட்டைக்கழுதை! குமரிப்பெண்ணா லட்சணமா இல்லாம கெக்கெக்கே சிரிக்கிறாளுகளாம் சிரிப்பு” என்று ஆத்தா தமிழ் அகராதியிலேயே இல்லாத கெட்ட கெட்ட சொற்களால் திட்ட ஆரம்பித்தது.நான் பயத்தில் விறைத்துப் போய் நின்று விட்டேன். ஆனால் இவள் சும்மா இருக்கவில்லை. “ஏன் ஆத்தாக் கிழவி! நீ குமரிப் பொண்ணா லட்சணமா குளிக்கக் கூடாதா? நீ என்ன சிம்ரானா?” என்று ஏகத்துக்கு எகிற, “ஐயோ, எதுவும் சொல்லாதடி.பேசாம இருடி” நான் இவளை அடக்கமுயல இவள் பேச்சை நிறுத்தி விட்டு ஆத்தாவுக்கு நெளிப்புக் காட்டினாள். ஆத்தாவுக்கு வெறியே வந்து விட்டது.கல் எடுத்துக் கொண்டு எங்களைத் துரத்த ஆரம்பித்து விட்டது. நாங்கள் நாய் படாத பாடு பட்டு ஓட்டம் பிடித்தோம். வீட்டுப் படலையைத் திறந்து உள்ளே நுழையும் வரை என்னால் பதட்டத்தைத் தணிக்க முடியவில்லை.இன்றும் கூட அதை நினைத்து நான் சிரிப்பதுண்டு.
இப்படியெல்லாம் எங்கள் பள்ளிக்காலத்தை வசந்தமாக்கிய நீ இன்று வாய் மூடி எங்களை விட்டுப் போனதென்ன? உனது கடவுள் போதாதென்று எனது கடவுளையும் கும்பிட்டாயே. இருவரில் ஒருவர் கூடவா உன்னைக் காக்க முன் வரவில்லை?.எங்கள் கோவில் திருவிழாவுக்கு நானே போவதில்லை.ஆனால் பட்டை அடித்துக் கொண்டு நீ கிளம்பி விடுவாய்.இன்றும் கூட என்னால் நம்பமுடியவில்லை.உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நீ இருந்து கொண்டுதான் இருக்கிறாய் என்றே நம்புகிறேன். இன்று காலை தொலைபேசியில் வந்த அந்தச் செய்தி பொய்யாகியிருக்கக் கூடாதா? என ஏங்குகிறேன். இத்தனை நாளாய் உடப்பில் இருந்த நீ எதற்காக முல்லைத்தீவுக்குப் போனாய்? உன்னுடன் உன் அம்மா அக்கா சாந்தமலர் அத்தனையும் போய் விட அந்த அதிர்ச்சி தாங்கமுடியாமல் உன் அப்பா மாரடைப்பால் உயிர்விட்டாரே அது உனக்குத் தெரியுமா? தப்பிப் பிழைத்த உன் தம்பிக்கு நீ தருவது இந்தத் துயரத்தைத் தானா? எனக்கு மட்டும் கால ஓட்டத்தை பின்னோக்கிச் செல்லச் செய்யும் வலு இருந்தால் இத்தனை இழப்புகளைத் தவிர்த்திருக்கலாமே. ஓன்று மட்டும் புரிகிறது. நீர்க்குமிழி போன்றதே வாழ்க்கை.இதில் எதுவுமே நிலையற்றது.ஜென்மங்கள் மீதெனக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் சொல்கிறேன் மீண்டும் ஒரு பிறப்பெடுத்தால் ஈழத்தில் தமிழனாய் பிறந்து விடாதே. அழுவதற்கும் அலைவதற்கும் அடிபட்டு அழிவதற்கும் அநாதைகளாய்ப் போவதற்கு அடிமையாய் அகதியாய் வெளிநாடுகளில் தஞ்சம் புகுவதற்கும் தஞ்சம் புகுந்த நாட்டில் சொந்த உறவுகளை வெட்டிச் சாய்ப்பதற்குமே பிறந்த ஈனர்கள் நாங்கள். இனியொருமுறை ஈழத்தமிழனாய்ப் பிறக்காதே.