Friday, June 05, 2009

பாதகம் செய்பவரைக் கண்டால்..?



அந்தச் சிறுகுன்றின் மீது ஏறி இப்போது கோணமலையை அடைந்திருந்தோம். மலைப்பதையின் இருமருங்கிலும் பச்சை பசேலென்றிருந்த காட்டையும் அந்தக் காடுகளின் பின்னால் ஒளிந்திருந்த இராணுவ முகாம்களையும் மருட்சியோடு பார்த்தவண்ணம் மலை உச்சியை அடைந்தோம். முதலில் தென்பட்டது இராணவன் வெட்டு. இராணவனின் தாயார் தென்னிலங்கையிலிருந்து தினமும் இங்கு சிவனைத் தரிசிக்கவருவாராம். தாய்படும் பாட்டைக் கண்டு மனமுருகிய இராணவன் மலையையே பெயர்த்து தான் இருக்குமிடத்தில் வைக்கமுயன்றான். அதனால் தான் மலையில் பெரியவெட்டு உண்டானது என்ற புராணக்கதை தான் நினைவில் வந்தது. கோவில் எந்தப்பகட்டும் இல்லாமல் எளிமையாக அழகாக இருந்தது. " குரைகடல் ஓதும் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.." என்று பாடி முடித்தபோது என் கண்கள் பனித்திருந்தன. கூடவே வந்த என் திருகோணமலைத் தோழி என்னை வியப்பாகப் பார்த்தாள். "நித்தி, இந்த தேவாரத்தை என் ஐந்து வயசில அர்த்தம் தெரியாமல் பாடினேன். இங்கு வந்து பார்த்தபிறகு தான் தெரியுது அந்தத் தேவாரத்தில் சொன்னது போலவே இந்தக் கோவில் அழகு தான். சம்பந்தர் கில்லாடி தான். அங்கிருந்தபடியே இங்கிருக்கும் கோவிலைப் பற்றி எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார்" என்றேன் நான். இன்றோடு மூன்றாவது தடவையாக கோணேசுவரத்திற்கு வந்திருக்கிறேன். எத்தனை தடவை வந்தாலும் சலித்துப் போகாத அழகு இந்தக் கோவிலுக்கு.

கோவிலின் இடது மூலையில் ஒரு மரம். அந்த மரத்தில் போய் வேண்டுதல் உள்ளவர்கள் துணியால் முடிச்சுப் போடுவார்கள். முதல் தடவை வந்திருந்த போது நான் அந்த மரத்தில் துணியால் முடிச்சுப் போட்டுவிட்டுக் குனிந்து கீழே பார்த்தேன். அம்மாடியோவ்... அப்படியே தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது. ஆயிரம் அடிப்பள்ளத்தாக்கு. கீழே கடலலைகள் பாறையை முட்டிமோதிக் கொண்டிருந்தன. நித்தி ஓடி வந்து என் கையைப் பிடித்து இழுத்தாள். போன உயிர் மீண்டு வந்தது போல் இருந்தது எனக்கு. இந்த இடத்திலிருந்து பலர் குதித்து தற்கொலை செய்துகொள்வார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் அந்த மரத்திற்கு போகும் வாசலை இழுத்து மூடிவிடுவார்களாம்.நித்தி சொல்லச் சொல்ல எனக்கு நெஞ்சு சில்லிட்டுப் போகும். மலையால் இறங்கி வாசல்பிள்ளையாருக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டு சோதனைச்சாவடிக்குள் நுழைந்தோம்.

எங்கள் அடையாள அட்டைகளைச் சோதித்துக் கொண்டிருந்த சிப்பாய் கண்களால் நித்தியை அளவெடுப்பது தெரிந்தது. நித்தி அவமானப்பட்டுக் குறுகிப் போய் அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அடையாள அட்டையைப் பார்த்ததும் 3 மாதங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் தான் என் நினைவுக்கு வந்தது. 3 மாதங்களுக்கு முன் ஒருநாள் காலை 6 மணிக்கு நடக்கும் இயற்பியல் வகுப்பில் என் அருகில் மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் நித்தி. அவள் உடல் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. " என்ன நித்தி, என்ன நடந்தது? " நான் பதற்றத்தோடு கேட்டேன். "செல்வி வெளியில வா " என்று அவள் என் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டுபோனாள். " செல்வி, சோனகர்வாடியில வைச்சு திடீரென்று ஒரு ஆமிக்காரன் என்னை மறிச்சான். என்ர அடையாள அட்டையை வாங்கிட்டு பக்கத்தில இருந்த இருட்டு ஒழுங்கைக்குள் வா அப்ப தான் அடையாள அட்டையைத் திருப்பித் தருவன் என்று சொல்லிட்டு அந்த ஒழுங்கைக்குள் போனான். நான் பதறியடிச்சு இங்கை ஓடி வந்திட்டன். இப்ப அடையாள அட்டை இல்லாமல் எப்பிடி வீட்டுக்குத் திரும்பி போறது தெரியல்ல " என்று சொல்லிவிட்டு விக்கி விக்கி அழுதாள். சொல்லும் போது அவளுக்கு பதற்றத்தில் மூச்சு வாங்கியது. வார்த்தைகள் தடுமாறின. எங்களோடு படிக்கும் ஆண் மாணவர்கள் உதவ முன் வந்தார்கள். நித்தி வீட்டுக்கு தகவல் சொல்லப்பட்டது. அந்தப் பகுதியில் இருக்கும் இன்னொரு கிராமசேவகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊர்ப் பெரியவர்கள் போய் இராணுவ அதிகாரியோடு பேசி அடையாள அட்டையை மீட்டு வந்தார்கள். இந்த சம்பவத்தை வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது. சொன்னால் கொல்லப்படுவீர்கள் என்று அந்த அதிகாரியால் நித்தி குடும்பம் மிரட்டப்பட்டது.

அடையாள அட்டை மீட்கப்படும் வரை நித்தி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். திரும்ப வகுப்புக்களுக்கு அவள் வரத்தொடங்கியபோது எங்களைக் கிண்டல் செய்தபடி எங்களுக்குப் பின்னால் நிழல் போல தொடரும் ஆண் மாணவர்கள் கூட்டம் எங்களுக்குக் காவல் தெய்வங்களாகத் தெரிந்தார்கள். முன்பெல்லாம் எங்களைத் தொடர்ந்து வரும் அவர்களை முறைத்துத் திட்டித் தீர்க்கும் நித்தியும் பேசாமல் அமைதி காத்தாள். அந்த மாணவர்களும் கேலி பேசுவதைத் தவிர்த்துப் பொறுப்பு நிறைந்தவர்களாக மாறி ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்பவேண்டும் என்ற அக்கறையோடு நடந்து கொண்டார்கள்.

திரும்பி மிதிவண்டியில் வரும் போது " நித்தி, நீ அநியாயத்திற்கு அழகாய்ப் பிறந்து தொலைத்து விட்டாய்" என்றேன் நான்." ஓகோ, அதனால் தான் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் அநியாயத்திற்கு அதிக நேரம் காக்கவைக்கப் படுகிறேனா? " என்று கேட்டாள் நித்தி. என்னால் எதுவும் பேசமுடியவில்லை. உவர்மலையில் இருக்கும் ஏற்றத்தில் மிதிவண்டியை ஓட்டும் போது எனக்கு மூச்சுவாங்கியது. வண்டி மட்டிக்கழியை நெருங்கிய போது லேசாக ஏதோ இடிப்பது போல் இருந்தது. குனிந்து பார்த்தால் வண்டியில் காற்றுப் போயிருந்தது. நாங்கள் இருவரும் வண்டியிலிருந்து இறங்கி அதை உருட்டிக் கொண்டு வந்தோம். மட்டிக்கழிப்பக்கத்திலேயே ஒரு மிதிவண்டி திருத்தும் கடை இருந்தது.
" நித்தி, வா இந்தக் கடையில போய்க் காத்தடிச்சுப் போட்டு போகலாம் " என்றேன் நான்.
" இந்தக் கடைவேண்டாம், செல்வி. கொஞ்சம் தள்ளி இன்னொரு கடைவரும் அங்கு போய்க் காத்தடிக்கலாம் " என்றாள் நித்தி.
" ஏன் நித்தி, இந்தக் கடைக்கு என்ன குறைச்சல்? பேசாமல் இங்கேயே அடிக்கலாம் " என்றேன் நான்.
"செல்வி சொன்னால் கேளு, இங்கை வேண்டாம் எண்டால் வேண்டாம் தான். எதுவும் பேசாமல் வா " நித்தி கோபமாக இருப்பது தெரிந்தது. நான் பேசாமல் நித்தியைப் பின் தொடர்ந்தேன். வீட்டை நெருங்கும் போது நித்தி சொன்னாள்.

"இந்தக் கடைக்காரன் யார் தெரியுமா? 12 வருசத்துக்கு முந்தி இந்த உவர்மலைப் பகுதியில இவ்வளவு சனம் இல்லை செல்வி, கொஞ்சக் குடும்பம் தான் இருந்தம். அப்ப இந்தக் கடைக்காரனும் வேற சில சிங்கள காடையர்களும் சேர்ந்து ஐம்பது அறுபது தமிழ்ச்சனத்தை வெட்டிக் கொன்றாங்கள் செல்வி, என்ர அப்பாவின் கழுத்தில என்ன பெரிய தழும்பு எண்டு அடிக்கடி கேப்பியே. அது இந்தக் கடைக்காரன் அவருக்குக் கொடுத்த பரிசு செல்வி " நான் திகைத்துப் போய் நித்தியைப் பார்த்தேன். " இவ்வளவு அநியாயத்தைச் செய்து போட்டு எவ்வளவு தைரியமா இந்த மக்களுக்கு மத்தியில் அவனால வாழமுடியுது நித்தி? அவனைத் தண்டிக்க யாருமில்லையா? "என்று ஆற்றாமையோடு கேட்டேன் நான். "எப்படி முடியும் செல்வி? கடையின் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சோதனைச் சாவடி. இதையெல்லாம் தாண்டி அவனை யாராவது தண்டிக்க வரமுடியுமா? என் அப்பாவுக்கு நடந்த அந்தக் கொடூரத்தை மறந்து நிம்மதியா வாழமுயற்சிக்கிறன். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவனைப் பார்க்கும் போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. அந்தச் சம்பவம் மீண்டும் மீண்டும் நினைவில வந்து பயமுறுத்துது, செல்வி" நித்தியின் கைகளை நான் மென்மையாகப் பற்றிக் கொண்டேன்.

அடுத்து வந்த நாட்களில் அந்தக் கடையைத் தாண்டிப்போகும் அந்த மனிதரைப் பார்த்தேன். புகைப்பிடித்த படி நிலத்தில் உட்கார்ந்திருந்து வேலை செய்து கொண்டிருந்தார். இந்த மனிதரா இப்படிச் செய்தார்? இப்போதும் வண்டியில் காற்றுக் குறைவாக இருந்தது. "இந்தக் கடைவேண்டாம்" என்று தாண்டிப் போனேன். அடுத்து வந்த கடையில் வண்டியை நிறுத்திக் " காத்தடிக்கவேண்டும் " என்றேன். மேற்சட்டை அணியாத வயதான ஒரு முதியவர் குனிந்து வண்டியில் காற்று நிரப்பிக் கொண்டிருந்தார். அவர் முதுகிலும் ஒரு பெரிய தழும்பு. காயம் ஆறி ஆண்டுக்கணக்கானாலும் வடு அப்படியே இருந்தது. "என்ன தழும்பு அது? " என்று நான் இப்போது கேட்கவில்லை.கேட்காமலேயே புரிந்தது. கடையில் இருந்த வானொலியில் " பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் மேல் காறி உமிழ்ந்துவிடு பாப்பா " என்ற பாரதியார் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எனக்குச் சிரிப்பு வந்தது. "ஓ பாரதி! மீசைக்காரக் கவிஞனே, மோதி மிதிக்கவேண்டாம். துணிந்து ஒரு கேள்வி கேட்கமுடியுமாய்யா இந்த நாட்டில?" என்று கேட்கவேண்டும் போல் இருந்தது. ஒருவேளை நீ இந்த நாட்டில் பிறந்திருந்தால் இப்படிப் பாடியிருப்பாயோ என்னவோ " பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயந்து நடுங்கி விடு பாப்பா, ஓடி ஒளித்துவிடு பாப்பா, அவர் காலில் விழுந்து விடு பாப்பா"

3 comments:

த.அகிலன் said...

அதிகாரங்களிற்கு எதிராக எங்கேயும் கேள்வி கேட்க முடியாது. அது எந்த அதிகாரங்களாயிருந்தாலும் என்பதையும் கவனிக்க வேண்டும்..

Snegethy said...

நான் திருகோணமலைக்கு 2 தரம் போயிருக்கிறேன் ஆனால் திருக்கோணேஷ்வரம் போகமுடியாமல் போயிற்று. அங்குள்ள ஒரு காளி கோயிலுக்குப் போன போது முதல்தடவையாக மயில் தோகை விரித்தியாடியதைப் பார்த்தேன்.

என் கண் முன்னால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும்போது நான் அகிம்சையைப் போதிக்க மாட்டேன் என்று சொன்னாராம் காந்தி....அந்தக்காந்தியும் பாரதியாரும் வந்துதான் நடந்துமுடிந்த ..நடந்துகொண்டிருக்கும் கொடூரங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

எங்களுக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார்....ஆமிக்காரருக்கு உதவியா எந்த வீட்டில இளம்பெண்கள் இருக்கிறார்கள் என்று காட்டிக்கொடுத்து நாய் மாதிரி நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு திரிகிற கூட்டமெல்லாம் சேர்ந்து ஒன்றா இருக்குதுகளாம். ஒரு 19 வயது பிள்ளையை நாசமாக்கிப்போட்டு அதைத் தட்டிகேட்ட குடும்பத்தாரை அடிச்சு மிரட்டிப்போட்டு அந்தப் பெண்ணின் 14 வயது தங்கையையும் கடத்திப் போய் நாசமாக்கியிருக்கிறார்கள்.

நீங்கள் சொன்னமாதிரி பயந்து நடுங்கி காலில் விழுந்திருந்தால் கசக்காமல் போயிருப்பார்களோ என்னவோ...

வல்லிசிம்ஹன் said...

பாதகம் இங்கு ஒன்று அங்கு ஒன்று என்றால் பரவாயில்லை.
இவர்களை யார் கேட்பது.