
வழக்கம் போல மளிகைக் கடையில் சாமான் வாங்கிவிட்டு வெளியே வரும் போது அந்த முகம் எதிர்ப்பட்டது. எங்கேயோ பார்த்த பழகிய முகம். நீண்ட நாள் பழகிய முகம். சட்டென்று நினைவில் வரவில்லை. வண்டிக்குள் ஏறி உட்கார்ந்த போது " நான் தேடும் செவ்வந்திப் பூவிது" என்று இளையராசா உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார். சட்டென்று அந்த முகம் நினைவிற்கு வந்தது. சிவா மாமா!. வண்டியை நிறுத்திவிட்டு மறுபடியும் கடைக்குள் ஓடினேன். அவர் குனிந்து எதையோ தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது."சிவா மாமா" கொஞ்சம் உரக்கவே கூப்பிட்டேன். அவர் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். ஒரு கணம் கடையில் இருப்பவர்கள் என்னைத் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு "நீங்கள் சிவா.., விளாத்தியடி சிவா மாமா தானே? " என்றேன். "ஓம், நான் சிவா தான். நீங்கள்..?" அவருடைய குரலில் அந்தப் பழைய கம்பீரம் இருக்கவில்லை. தலை முடி நரைத்துப் போய் 4 நாட்கள் மழிக்காத தாடியோடு இருந்தார். என்னால் நம்பமுடியவில்லை. அவரின் கூர்மையான விழிகளைத் தவிர மற்றவையெல்லாம் மலர்ச்சி இழந்து போய்க் காணப்பட்டது. முன்பு சிவா மாமா கமலகாசன் போல் இருப்பார். ஊரில் எல்லோரும் அவரை அப்படித்தான் சொல்வார்கள். " நான் செல்வி.." அதற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை. " எந்த செல்வி...? " என்று கேட்டவர் பின்னர் திகைத்த பார்வை பார்த்தார். " நீங்கள் எப்ப இங்க வந்தனீங்கள்? கனகாலமோ?...சின்னக் குழந்தையாக பார்த்தது " அவருடைய பார்வை என்மேல் நிலைக்குத்தி நின்றது. " 2 வருசமாச்சு இங்க வந்து... நீங்கள் எங்க இருக்கிறீங்கள்? தனியாவா வந்தனீங்கள்? ..." அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? குழந்தைகள் இருக்கின்றனவா என்று கேட்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் முடியவில்லை." நான் இங்க பக்கத்தில தான் பொடியளோட சேர்ந்து ஒரு வீடு எடுத்திருக்கிறன். பொடியள் கடையில் வாங்கிச் சாப்பிடுவாங்கள். நான் தான் சமைக்கவேணும்..இங்க தான் தமிழ்க்கடைக்கு வாறனான்... " என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது.ஆக, சிவா மாமாவுக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கு மேலும் அவரோடு பேசும் தைரியம் எனக்கிருக்கவில்லை. விடைபெற்றுக் கொண்டேன். வண்டியில் " மங்கைக்குள் என்ன நிலவரமோ " என்று இளையராசா பாடிக்கொண்டிருந்தார்.என் மனமோ கலவரப்பட்டுப் போய்க் கிடந்தது.
1987 அப்போது சிவா மாமாவுக்கு இருபத்தைந்து வயதிருக்கக் கூடும். எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் முச்சந்தியில் நண்பர்களோடு உட்கார்ந்திருப்பார். பக்கத்துவீட்டு மலரக்காவோடு நான் பள்ளிக்கூடம் போவேன். மலரக்கா உயர்தர வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். நாங்கள் முச்சந்தியைத் தாண்டும் போது சிவா மாமா "மலரே குறிஞ்சி மலரே" என்று பாடத்தொடங்குவார். மலரக்கா முகத்தை மற்றப்பக்கம் திருப்பிக் கொள்வார். என் கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டு முச்சந்தியைத் தாண்டிப் போவார். முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு "பொறுக்கி" என்று முணுமுணுப்பார். மலரக்காவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஒவ்வொரு வெள்ளியும் விரதம் இருப்பார். வயலுக்கு நடுவில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு பூமாலை கட்டிக் கொண்டு போய்க் கொடுப்பார். ஒவ்வொரு வெள்ளியும் நாங்கள் கோவிலுக்குப் போகும் போதும் கோவில் வாசலில் இருக்கும் அரசமரத்தின் கீழ் சிவா மாமா உட்கார்ந்திருப்பார். மலரக்காவைப் பார்த்துப் புன்னகைப்பார். பதிலுக்கு எந்த உணர்ச்சியையும் காட்டாது கருமமே கண்ணாக சாமி கும்பிடுவார் மலரக்கா. ஆனால் மலரக்கா எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் சிவா மாமா அவரை நிழல் போல தொடர்ந்து கொண்டிருப்பார். எனக்கு அவரைப் பார்க்கும் போது கழிவிரக்கம் தோன்றும். அன்றும் ஒரு வெள்ளிக் கிழமை நான் வழக்கம் போல் மலரக்காவோடு கோவிலுக்குப் போனேன். அரசமரத்தின் கீழ் சிவா மாமாவைக் காணவில்லை. கோவிலுக்குள் சென்றபின்னர் மலரக்காவின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. முகத்தில் ஒருவித ஏமாற்ற உணர்வு தெரிந்தது. உள்வீதியைச் சுற்றிவிட்டு நாங்கள் வெளியே வரும் போது வாசலில் சிவா மாமா எதிர்ப்பட்டார். மலரக்கா ஒரு கணம் திகைத்துப் போய் பின்னர் சுதாரித்துக் கொண்டு "செல்வி, வா போகலாம் "என்று என் கையைப் பற்றி இழுத்தார். " மலர் நில்லும். நான் உம்மோட கதைக்கவேணும்." என்று வழியை மறித்தார் சிவா மாமா. "போகவிடுங்கோ, யாராவது பார்த்தா எனக்குத் தான் பிரச்சனை வழியை விடுங்கோ " என்றார் மலரக்கா. சிவா மாமா எதுவும் பேசவில்லை. சட்டைப்பையிலிருந்து ஒரு கடதாசியை எடுத்தார். கோவில் படியில் அதனை வைத்து அது காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் ஒரு கல்லை வைத்தார். நிமிர்ந்து பொருள் நிறைந்த பார்வை ஒன்றை மலரக்கா மீது வீசி விட்டு மிதி வண்டியில் ஏறிப் போனார். மலரக்கா எதுவும் பேசவில்லை. படியை நெருங்கும் போது திடீரென்று குனிந்து அந்த காகிதத்தை எடுத்தார். அர்ச்சனைத் தட்டின் கீழ் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டார்.
ஒரு சில மாதங்கள் சென்றபின் ஒருநாள் மலரக்கா வீட்டுக்குப் போனபோது வீடே அமளிப்பட்டுக் கொண்டிருந்தது. மலரக்காவின் பெற்றோர் கோபமாக மலரக்காவைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் நடுவே சிவா மாமாவின் பெயரும் அடிபட்டது. " அவன் ஒரு உதவாக்கரை. வேலை வெட்டி இல்லாதவன். எங்கட தகுதி என்ன? அவன்ர தகுதி என்ன இண்டையோட எல்லாத்தையும் மறந்திடவேணும். மீறி ஏதாவது நடந்தா பெத்தமகள் என்று பாக்கமாட்டன்" என்று மலரக்காவின் அப்பா கத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. கொஞ்ச நேரம் கழித்த தழுதழுத்த குரலில் " பிள்ளை, நீ எங்களுக்கு ஒரு பொம்பிளைப்பிள்ளை. உன்னை நல்ல வசதியான இடத்தில செய்து கொடுக்கவேணும். நீ நல்லா இருந்தா தான் எங்களுக்கு நிம்மதி. சிவாவின்ர குடும்பம் சரியான கஸ்டப்பட்ட குடும்பம். அவனுக்கு அப்பா இல்லை. இரண்டு தங்கைச்சிமார் இருக்கினம். நிறையப் பொறுப்பு. நீ அந்த குடும்பத்தில போய் கஸ்டப்படவேண்டாம் " என்று மலரக்காவின் அம்மா கெஞ்சுவது கேட்டது. நான் வீட்டுக்குள் நுழைந்தேன். மலரக்கா அழுது கொண்டிருப்பார் என நினைத்தேன். மாறாக அவரின் முகம் இறுக்கமாக இருந்தது. சலனம் இன்றி நேராகப் பெற்றோரைப் பார்த்தார். " அப்பா, அம்மா செய்தால் நான் சிவாவைத் தான் செய்வேன். அந்த முடிவில எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் சொன்ன தகுதி கிகுதி எல்லாம் எனக்குப் பெரிசாத் தெரியல்லை. இது தான் என்ர முடிவு " என்று மெல்லிய ஆனால் அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்குள் போனார். மலரக்காவின் துணிச்சல் வியப்பைக் கொடுத்தது.
ஒரு சில மாதங்கள் கழித்து மலரக்காவுக்கு ஆசிரியர் நியமனகடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போய் கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்தார். அரசமரத்தின் கீழ் சிவா மாமா. " மலர், இங்கை இருந்து என்னால எந்த தொழிலும் செய்யமுடியாது போல இருக்கு. ஒரே பிரச்சனை. தோட்டத்தில் வேலை செய்யேக்க வந்து இராணுவம் பிடிச்சுக் கொண்டு போறாங்கள். நான் வெளிநாடு போறதுக்கு முயற்சி செய்யப் போறன்" மலரக்கா நிமிர்ந்து சிவா மாமாவைப் பார்த்தார். மலரக்காவின் கண்கள் குளமாகி இருந்தன. " மலர், ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்? என்ன நடந்தது? " சிவா மாமா பதற்றத்தோடு கேட்டார். "சிவா, எனக்குப் பயமா இருக்கு. நீங்கள் வெளிநாட்டுக்குப் போனால் என்னை மறந்திடுவீங்களோ என்று". சிவா மாமா மலரக்காவின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். " மலர், என்ன விசர் கதை கதைக்கிறீர்? உம்மை நான் கைவிடுவனா? இந்த அம்மன் கோவிலுக்கு முன்னால வைச்சு சொல்லுறன் நீர் தான் என்ர மனுசி. நான் எந்தக்காலத்திலையும் மாறமாட்டன்." மலரக்கா தலையைக் குனிந்து நிலத்தை நோக்கிக் கொண்டிருந்தார். " எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைச்சிருக்கு. அப்பா அம்மாவுக்கு நான் வேலைக்குப் போறதில பெரிசா விருப்பம் இல்லை. ஆனால் படிச்சிட்டு வீட்டில இருக்க எனக்கு விருப்பமில்லை. அது தான் வேலைக்குப் போகலாம் என்று இருக்கிறன் " என்று மெல்லிய குரலில் சொன்னார் மலரக்கா. " மலர், நீர் தாராளமா வேலைக்குப் போகலாம். உமக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்யும். நான் வெளிநாட்டுக்குப் போய் நன்றாக உழைக்கவேணும். எனக்கு வீட்டில் பொறுப்பு இருக்கு. உமக்குத் தெரியும் தானே? எப்பிடியும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் அந்தப் பொறுப்பெல்லாம் செய்து முடித்துவிடுவன். அதுக்குப் பிறகு உம்மை நான் வெளிநாட்டுக்குக் கூப்பிடலாம். அதுவரைக்கு காத்திருப்பீர் தானே? " என்றார் சிவா மாமா. மலரக்கா சிவா மாமாவைப் பார்த்துப் புன்னகைத்தார். " கவலைப்படாதேங்கோ சிவா, நான் எப்பவும் உங்கள் மலர் தான். ஐந்தாறு ஆண்டானாலும் காத்திருப்பன் " என்றார். அந்த சந்திப்பின் பின்னர் சிவா மாமாவை ஊரில் பார்க்கமுடியவில்லை. அதுவே அவர்களிருவரினதும் கடைசி சந்திப்பாக இருந்தது.
ஒரு சில மாதங்கள் கழித்து சிவா மாமா கனடா போய்ச் சேர்ந்து விட்டதாக ஊரில் பேசிக் கொண்டார்கள். மலரக்காவுக்கும் யாழ் தீவுப்பகுதியில் இருக்கும் ஒரு பாடசாலையில் ஆசிரியர் வேலை கிடைத்திருந்தது. ஊரில் இருக்கும் ஒரு நண்பர் மூலமாக மலரக்காவுக்கு சிவா மாமா கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். மலரக்காவின் பெற்றோரின் எதிர்ப்பும் குறைந்திருந்தது. மலரக்கா சேலை கட்டி தலையில் ஒற்றை ரோசாப்பூவுடன் பேருந்தில் ஏறிப் பள்ளிக்கூடம் போவார். காலையில் தலை முழுகி தன் நீண்ட கூந்தல் காற்றில் ஆட அவர் போவதைப் பார்க்கும் போது தேவதைபோல் இருப்பார். சிவாமாமா மட்டும் இப்போது இங்கிருந்தால் மலரக்கா வேலைக்குப் போகும் அழகைப் பார்த்து ரசித்திருப்பார் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும்.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை காலையில் நேரத்திற்கே எழுந்து பள்ளிக்குப் போன மலரக்கா மாலை 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை. மலரக்காவின் அம்மா வாசலையே பார்த்தபடி பதற்றத்தோடு உட்கார்ந்திருந்தார். மலரக்காவின் சித்தப்பாவின் மகன் திடீரென்று வீட்டுக்கு வந்தான். " பெரியப்பா, மலரை நீர்வேலி சோதனைச் சாவடியில வைச்சு என்னோட படிக்கிற பெடியன் பார்த்தவனாம். ஏதோ விசாரணை என்று முகாமுக்குள்ள கூட்டிக்கொண்டு போனவங்களாம்." என்றான் பதற்றமாக. மலரக்காவின் அம்மா தலையில் கைவைத்து அழத்தொடங்கினார். மலரக்காவின் அப்பா என் வீட்டுக்கு ஓடி வந்தார். என் அப்பாவோடு ஏதோ பேசினார். ஊரைச்சேர்ந்த நாலைந்து ஆண்களையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டுப் போனார்கள். அப்பா வீடு திரும்பும் போது இரவு 10 ஐத் தாண்டி இருந்தது. எனக்குத் தூக்கம் வரவில்லை. மலரக்காவுக்கு என்ன நடந்தது என்ற கவலை என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அடுத்தநாள் காலையிலும் அப்பாவும் வேறு சில ஆண்களும் வெளியே போனார்கள். அவர்கள் போன எல்லா இராணுவ முகாம்களிலும் மலர் என்று யாரையும் தாங்கள் கைது செய்யவில்லை என்று கைவிரித்து விட்டார்கள். அப்பா வீட்டுக்கு வந்து உடைமாற்றப் போகும் போது மலரக்கா யாழ் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. அப்பா மலரக்காவின் பெற்றோரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். 4 நாட்கள் கழித்து மலரக்கா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார்.
மலரக்கா வீட்டுக்கு வந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரைப் பார்க்க ஆவலோடு அவர் வீட்டுக்கு ஓடினேன். வரவேற்பறையில் மலரக்காவின் அம்மா சோர்ந்து போய் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார். அறைக்குள் மலரக்கா உட்கார்ந்திருந்தார். நான் உள்ளே போனபோது வழக்கமாக அவர் முகத்தில் இருக்கும் மலர்ச்சி இல்லாமல் இருந்தது. முகத்திலும் கைகளிலும் அங்கங்கே காயக்கோடுகள். எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி இறுக்கமாக உட்கார்ந்திருந்தார். நான் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. அரைமணி நேரமாக மலரக்காவின் பார்வை எங்கேயோ நிலைகுத்தியிருந்தது. வாசலில் தபாற்காரனின் மணியோசை கேட்டது. மலரக்கா துள்ளி எழுந்து ஓடிப்போய் கடிதத்தை வாங்குவார் என்று எதிர்பார்த்தேன். மலரக்கா எழவில்லை. அவரின் அம்மாவும் எழவில்லை. நான் ஓடிப்போய் தபாற்காரனிடம் கடிதத்தை வாங்கினேன். கடிதத்தின் மேல் உறையில் கனடா நாட்டுமுத்திரையைப் பார்த்ததும் சிவா மாமாவின் கடிதம் என்று புரிந்தது. கடிதத்தை வாங்கிக் கொண்டு உற்சாகத்தோடு உள்ளே போனேன். மலரக்கா இதனைப் பார்த்தால் நிச்சயம் துள்ளிக் குதிப்பார். நான் பூனை போல் மெதுவாகப் பதுங்கிப் போய் திடீரென்று அந்தக் கடிதத்தை மலரக்காவின் முன் நீட்டினேன். மலரக்கா அந்தக் கடிதத்தை கையில் வாங்கிக் கொண்டார். அதனைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு வீரிட்டு அழத்தொடங்கினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை."மலரக்கா, அழாதேங்கோ" என்று மென்மையாக அவர் கையைப் பற்றிக் கொண்டேன். மலரக்கா என்னை வாரி அணைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதார். நான் திகைப்போடு அவர் அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன்.
அடுத்தநாள் அதிகாலை மலரக்காவின் அம்மாவின் அழுகுரல் கேட்டு கண்விழித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக மலரக்காவின் வீட்டில் கூட்டம் கூடத்தொடங்கியது. அம்மாவும் அப்பாவும் மலரக்கா வீட்டுக்குப் போனார்கள். சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு மாலையில் அழுகுரல்கள் கொஞ்சம் ஓய்ந்திருந்தன. நான் மலரக்கா வீட்டுக்குப் போனேன். மலரக்காவின் புகைப்படத்திற்கு மாலையிட்டு விளக்கு ஏற்றியிருந்தார்கள். வீடு இருண்டு போய் கிடந்தது. மலரக்கா அந்த வீட்டில் இல்லை என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. நான் மலரக்காவின் அறைக்குள் நுழைந்து மின்விளக்கைப் போட்டேன். அவரின் படுக்கையறையில் சிவா மாமாவின் கடிதம் உடைக்காமலேயே கிடந்தது. அதன் மேலுறையில் " உங்கள் கடிதத்தை வாசிக்கும் தகுதியை நான் இழந்துவிட்டேன் சிவா " என்று மலரக்கா எழுதியிருந்தார். மலர் என்ற அந்த மெல்லியபூ ஏன் வாடிப்போனது? எப்போதுமே துணிவோடு இருக்கும் மலரக்கா எதற்காக மரணத்தைத் தேடி தன்னையே அழித்துக் கொண்டார்? சிவாமாமாவின் காதலைக்கூட மறந்து மலரக்கா மரணத்தைத் தேடிக்கொள்ள யார் காரணம்? எனக்குப் புரியவே இல்லை.
பின்னால் வாகனங்களின் ஒலிகேட்டு திடீரென்று சுயநினைவிற்கு வந்தேன். இளையராசா பாடி ஓய்ந்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்ததும் சிவா மாமாவின் முகம் அடிக்கடி நினைவிற்கு வந்தது. மலரக்காவின் மீது எனக்கு கோபம் வந்தது. மரணம் என்ற முடிவுக்குப் போகுமுன் ஒருகணம் சிவா மாமாவை நினைத்துப் பார்த்தாயா, மலரக்கா? என் ஐந்து வயதில் நான் பார்த்த அந்த காதல் கதையின் முடிவு எதனால் இப்படியானது? மனச்சோர்வோடு தூங்கப்போனேன். " இந்த அம்மன் கோவிலுக்கு முன்னால வைச்சு சொல்லுறன். நீர் தான் என்ர மனுசி. நான் எந்தக்காலத்திலையும் மாறமாட்டன் " என்று சிவாமாமா 20 ஆண்டுகளுக்கு முன் சொன்னது மீண்டும் மீண்டும் என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

19 comments:
மிக அருமை.......கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது
படித்து கனத்த மனதுடன்..என்ன சொல்லவதெனத் தெரியாமல்!!
நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லாமலிருக்க முடியவில்லை!
இது ஒரு நல்ல காதல் கதை என்று எப்படிக் கடந்து போவது?..
இப்டிச் சொல்லலாம் இது ஒரு காதல் கதை மட்டும் அல்ல..?
அருமையான காதல் கதை.
துயரத்தின் சுவடில்லாதக் குடும்பங்களே இல்லையெனும் நிலைக்குப் பின்னும் :(:(:(
காதல் கதை இன்பத்தினை கொண்டு வந்திருக்கக்கூடும் என்று நினைத்திருந்தபொழுதில்....
சோகம் :((
அருமையான உருக்கமான கதை.
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
மலர் என்கிற பெயர். வாடி விழுவதற்காஅக வைத்தார்களோ. இன்னும் எத்தனை மலர்கள் இவ்வாறு வாடினவோ. உருக்கம் என்ற ஒரு வார்த்தை போதாது, இந்தச் சம்பவத்துக்கு.
:-(
மனம் கனத்துப் போனது....
துயரத்தின் வடுக்களுக்கு எப்படி "இது ஒரு காதல் கதை" என்று பெயர் வைத்தீர்கள்?
கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உணர்வு பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.
அருமை.
த.அகிலன் said...
//இப்டிச் சொல்லலாம் இது ஒரு காதல் கதை மட்டும் அல்ல..?//
ஆமாம்.
பின்னூட்டங்களுக்கான மனோ நிலை இல்லாமல் இரந்ததை ஒப்புக்கொள்கிறேன் அதனாலேயே தாமதமான பின்னூட்டம் பூங்கோதை,
அதேதான் அகிலனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்...
மனதை உருக்கும் காதல் கதை. அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
இந்தக் கதையின் முடிவு துயரம் தான் என்றாலும் சிவாமாமாவின் காதல் மாறவில்லையே. அதனால் தான் இது ஒரு காதல் கதை.
எத்தனையோ சிவாமாமாக்களையும் மலரக்காக்களையும் இந்திரா தேசம் எமக்குப் பரிசாகத்தந்தது. அவர்களின் பரிசுக்கு நன்றி.
It is a wonderful love story!!! I could imagine that there had been many such incidents due to racist sinhalese atrocities aginst innocent eelam tamils!!!
''உங்கள் கடிதத்தை வாசிக்கும் தகுதியை நான் இழந்துவிட்டேன் சிவா ''
என்ற மலரின் இறுதி வரிகள் அவரின் காதல் பற்றிய தவறான பார்வையை புரியவைக்கின்றது. அது அவர் வாழ்ந்த சமூகம் ஏற்படுத்திய பாதிப்பாகவிருப்பினும், மலர் ஒரு படித்தவராக அப்படி முடிவெடுத்தது ஒரு முட்டாள் தனம் தவிர வேறெதுவுமில்லை என படுகின்றது. நான் மலராகவிரிந்திருந்தால் சிவா மாமாவுடன் வாழ முடிவெடுத்திருப்பேன்.
இந்தக் கதை நடந்த காலப்பகுதி 87-89. படித்த பெண்ணாக இருந்தாலும் தன் மீது திணிக்கப்பட்ட வன்முறையை எதிர்கொள்ளும் பக்குவம் பல பெண்களுக்கு இருப்பதில்லை. சிலர் அதையும் தாண்டி உயிரோடு வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்து மீண்டு ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர்களால் வாழமுடிவதில்லை.
மலரக்கா ஒரு சமுதாய சிந்தனையின் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமான அந்நேர முன்னுதாரணமாக இருந்திருக்கலாமோ என யோசித்தேன். வரலாற்றில் இவ்வாறான் நிகழ்வுகள் இடம்பெற்ற பொழுதுகளில் நிறைய தடவைகளில் அந்நேர முடிவுகள் சமுதாய சமூக பார்வையை மாற்றியுள்ளது, இந்தியாவில்.
Post a Comment