Thursday, November 30, 2006

ஊர் வரும் பாதை தெரியாமல் - உங்கள்
உறவினில் ஒன்று வாடுதம்மா
போர் முரசம் உங்கு கேட்கையில் - இந்த
பாவையின் மனம் தடுமாறுதம்மா (தாயகமே..)


ஆற்றங்கரையின் ஓரத்தில்- ஊஞ்சல்
ஆடி வளர்ந்த ஆலமரம்
மாமன் வீட்டுத் தோட்டத்தில் - அஞ்சி
மறைந்திருக்கும் அணிற்பிள்ளை
அத்தனையையும் இழந்து விட்டோம்-இந்த
அவசர வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டோம்.
தாலாட்டை மறந்து விட்டோம் - ஈழத்
தாய் மடிவாசம் இழந்துட்டோம்
விழிகளில் ஈரம் துடைத்து விட்டு- ஈழ
விடியலுக்காக காத்திருப்போம் (தாயகமே...)




அன்னை மண்ணின் அரவணைப்பில் - அன்பில்
ஆடிமகிழ்ந்த காலம் அது
தென்னம் ஓலைக் கூரையில் -அன்பைத்
தேக்கிவைத்த குடிசை அது.
அத்தனையையும் இழைந்து விட்டோம் - இந்த
அந்நிய வாழ்வுக்குள் இணைந்து விட்டோம்.
தோட்டம் துரவுகளை இழந்து விட்டோம்- எங்கள்
தோழமை உணர்வைத் தொலைத்து விட்டோம்
மனதினில் பாரம் சுமந்து கொண்டு- எங்கள்
மண் விடுதலைக்காக காத்திருப்போம்.
(தாயகமே..)



செந்தமிழீழத் தமிழ்ப் பிள்ளை - இங்கு
சொந்த மொழி பேச மறுக்கின்றாள்
வந்த பாதையின் சுவடு மறந்து - சொகுசாய்
வாழும் தமிழ் மகனும் இருக்கின்றான்.
காலநதி நீரின் ஓட்டத்தில் - எங்கள்
கன்னித் தமிழ் இங்கு செத்திடுமோ?
ஞாலம் நிலைக்கின்ற காலம் வரை -அது
ஞாயிறு போல நிலைத்திடுமோ.
சொந்த மண் தாண்டி வந்து விட்டோம் - என்று
சொந்த மொழி பேச மறப்போமோ?
புலம்பெயர் மண்ணின் புதுமொழியில்
புலம்பிப் பண்பாடு மறப்போமோ?
(தாயகமே...)

4 comments:

Chandravathanaa said...

பூங்கோதை,
கருப்பொருள் சோகமானதாயினும்,
அழகும், இதமும், இனிமையும் கலந்திருக்கிறது.
இதை நீங்களே எழுதினீர்களா?

ரவி said...

அருமையாக படைத்துள்ளீர்கள்...

தாயகம் said...

வணக்கம் சந்திரவதனா,
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.கனடாவில் நடந்த ஒரு பாடல் குறுந்தட்டுக்காக பாடல்களை எழுதித்தரும் படி இளையோரை கேட்டிருந்தார்கள். அப்போது என் மனதில் அந்த மண்ணும் இந்த வாழ்வும் தந்த ஏக்கத்தை வரிகளாக வடித்திருக்கிறேன்.

தாயகம் said...

நன்றி செந்தழல்
தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள். குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.