கனடா வாழ் தமிழர்களிடையே பல்கலைக்கழகக் கல்வி என்பது இன்றியமையாத ஒன்று. ஒவ்வொரு பெற்றோரும் தத்தமது பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்று கல்வி பெறவேண்டியதன் தேவையை உணர்ந்துள்ளனர். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக பெற்றோரிடையே ஒரு மயக்கமான கருத்து நிலவுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள். கனடா நாட்டிலே சில பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட துறைகளுக்குப் பெயர்போனவை. அவ்வாறான பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வேறு இடங்களுக்குப் படிக்கப் போகும் போது வரவேற்பும் வேலைவாய்ப்பும் இலகுவாகக் கிடைக்கின்றன. அதனால் பெற்றோர் அவ்வாறான சிறந்த பல்கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளைகள் கல்விபயில வேண்டும் என்ற பேரவாக் கொண்டு அவர்களை அந்தப் பல்கலைக்கழகங்களிற்குப் படிக்க அனுப்புகின்றனர்.
பெரும்பாலான தமிழர்கள் கார்பரோ நகரிலும் மிசிசாகா, மார்க்கம் போன்ற நகர்களிலும் குடியிருப்பதால் அவர்களுடைய பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் போது பெற்றோர்களைப் பிரிந்திருக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வீடுகளில் மற்ற நண்பர்களோடு குடியிருக்கும் இவர்களை வழிநடத்தவோ பண்படுத்தவோ பெற்றோரோ பெரியோரோ இல்லாத சூழ்நிலையில் இவர்கள் வாழ்கிறார்கள். பல்கலைக்கழத்திற்குப் போன தன்பிள்ளை என்ன செய்கிறான் என்று கவனிக்கப் பெற்றோரும் அக்கறைப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் வழி மாறித் தடம் மாறி பண்பற்றுப் போகின்ற ஒரு துன்பியல்நிலை உருவாகி வருகின்றது.
பல்கலைக்கழகங்களிற்கு வெளியே வீடுகளில் நண்பர்களோடு தங்கும் இந்த மாணவர்களை வெள்ளி இரவுகளில் இரவு விடுதிகளில் குடிபோதையில் காணமுடிகிறது. ஆண்- பெண் உறவின் தூய்மை இவர்களுத் தெரிவதில்லை. திருமணம் என்ற சடங்கின் முக்கியத்துவமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடோ இவர்களுக்கு அறவே இல்லை. மனம் போனபோக்கில் வாழ்ந்து விட்டுப் போவது தான் இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இவ்வாறு வெளியே தங்கும் மாணவர்கள் எல்லோருமே வழி மாறிப் போகின்றார்கள் என்று குற்றம் சாட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் வழி மாறிப் போகின்றவர்கள் விழுக்காடு அதிகரித்துப் போகின்றது என்ற திடுக்கிடும் உண்மையை உணரவைப்பதே இக்கட்டுரையின் எண்ணப்பாடு.
வெள்ளையரின் பண்பாட்டில் திளைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தமிழர் பண்பாட்டின் மேன்மையைப் புரியவைப்பது என்பது இங்கு குழப்பமான விடயம். ஆண், பெண் எனத் தனித்தனியே வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஆண்களிருக்கும் வீட்டுக்குப் பெண்கள் போவதும் பெண்ணிருக்கும் வீட்டுக்கு ஆண் போய்த் தங்கிவிட்டு வருவதும் மிகச்சாதாரணமாக நடக்கின்றது. இரவு விடுதிகளுக்குப் போகும் ஆண்களும் பெண்களும் குடிப்பதும் கட்டியணைத்து நடனமாடுவதும் பண்பாட்டின் தலைசிறந்த கூறுகள் என்று இவர்கள் நினனத்துக் கொள்கின்றார்கள். அவ்வாறு நடந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் மாணவர்களை கோழைகள் என்றும் ஆண்மையற்றவர் என்றும் இவர்கள் கேலி செய்கிறார்கள். இதனால் இது போன்ற செயல்களில் ஈடுபடவிரும்பாத மாணவர்களும் தாங்கள் செய்வது தவறோ என்று எண்ணத் தலைப்படுகின்றார்கள்.
தமிழர்கள் நடத்தும் கேளிக்கை இரவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வெள்ளையர் போல் உடையணிவதும் தலைக்கு சாயம் பூசிக் கொள்வதும் ஒயில் என நினைத்துக் கொள்கிறார்கள். இதற்கு இவர்களில் செலவழிக்கும் பணமோ மிக மிக அதிகம். இது போன்ற நிகழ்ச்சிகளில் குடிபோதைக்கும் அடிதடிகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. கேளிக்கை என்ற பெயரில் கேவலங்களை தெரிவு செய்வது ஏனோ என எண்ணத்தோன்றுகிறது. கனடா மண்ணில் பிறந்து வளரும் முதல் புலம்பெயர் தமிழ் மாணவர் தலைமுறை இனிவரும் தலைமுறைக்குப் பண்பாடு என்ற பெயரில் விட்டுச் செல்லப் போவது குப்பைகளையா? நீங்களே சிந்தியுங்கள்.
Saturday, September 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
Problem Identified! Any ideas to fix it?
I dont agree parental control would bring a better share of cultural beleivers . Also, cant regard the Uni , the turning point. That might be the place to execute their desires that settled well before to go uni, may be higher school time or even before that.
உடன்படுகின்றேன். பல்கலைக்கழக வாழ்க்கை தான் தூண்டுகின்றது என்று சொல்லவரவில்லை. ஆனால் பல்கலைக்கழக வாழ்க்கை தான் அவர்களுக்கு அதிக சுதந்திரத்தைக் கொடுக்கின்றது.
ஒரு திருக்குறள்
சிறை காக்கும் காப்பு என் செய்யும் மகளிர் நிறைக்காக்கும் காப்பே அணி
இந்த இடத்திற்கு அது பொருத்தமாக இருக்கும்.
குறள் பொருள் தாருங்கள்.
சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.”
பெண்களை கட்டுதிட்டம் செய்து பாதுகாக்கிற வெளிக்காவல் என்ன பலன் தரும்? பெண்கள் தம்முடைய மன நிறை வழுவாது காத்தலே சிறந்த காவல் ஆகும்.
பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் இது பொருந்தும்.
Post a Comment